தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில் ஈரான் வெளிநாடுகளில் lone wolf a*ttack களை நடத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் அறிவிப்பு

அமெரிக்கா தனது பெரும் அளவிலான படைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி, தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில், தனிநபர் தாக்குதல்கள் (lone-wolf attacks), சைபர் ஊடுருவல்கள் மற்றும் வெளிநாடுகளில் படுகொலை நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கான ஈரானின் விருப்பம் அதிகரிக்கக்கூடும் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் சிஎன்என் (CNN) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் ஆரம்ப நாட்களில், ஈரானின் “ஸ்லீப்பர் செல்கள்” (கண்டறியப்படாமல் அமெரிக்காவிற்குள் ஒளிந்திருந்து தாக்குதல் உத்தரவுக்காகக் காத்திருக்கும் முகவர்கள்) செயல்படக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், ஈரான் வெளிநாடுகளில் தாக்குதல்களை நடத்த அனைத்து விதமான உத்திகளையும் கையாள்கிறது. குறிப்பாக, உள்நாட்டுத் தாக்குதல்களைத் தூண்டுவதிலும், சில நேரங்களில் தனது எதிரிகளைக் கொல்லப் பெயர்பெற்ற குற்றவாளிகளை வாடகைக்கு அமர்த்துவதிலும் கவனம் செலுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உயர் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஈரானிய அதிருப்தியாளர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட பல படுகொலை முயற்சிகளை அமெரிக்க நீதித்துறை சமீபத்திய ஆண்டுகளில் முறியடித்துள்ளது.
இத்தகைய வழக்குகளில், ஈரானிய அதிகாரிகள் பெரும்பாலும் தங்களது பினாமி அமைப்புகள் மூலம் குறைந்த அளவிலான குற்றவாளிகளை — சில நேரங்களில் அமெரிக்க சிறைகளுக்குள்ளேயே இருப்பவர்களை — தங்களுக்குப் பதிலாகச் செயல்பட வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், ஈரானின் வழிகாட்டுதலின்படி ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராக அரசியல் படுகொலைகளைச் செய்ய முயன்றதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் 2024 கோடையில் வாடகைக்குக் கொலை செய்பவர்கள் என்று நம்பி மாறுவேடத்தில் இருந்த அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்துத் திட்டங்களை வகுத்தபோது கைது செய்யப்பட்டார்.
மெக்சிகோவிற்கான இஸ்ரேலிய தூதருக்கு எதிராகக் கடந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்ட ஒரு சதி உட்பட, இஸ்ரேலிய அதிகாரிகளைக் குறிவைத்த ஈரானிய படுகொலைத் திட்டங்களும் முறியடிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஈரான் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்புத் தளங்கள் வாயிலாக உலகம் முழுவதும் வன்முறை மற்றும் பொதுச்சொத்து சேதங்களை விளைவிக்கத் தனிநபர்களைத் தூண்டுகிறது. இது கவலைக்குரிய விஷயம் என்று முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி வில்லியம் வெச்ஸ்லர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை வேலைக்கு அமர்த்துவதை விட, கொள்கை ரீதியாக ஈர்க்கப்பட்டுத் தாங்களாகவே முன்வந்து தாக்குதல் நடத்தும் தனிநபர்களால் (lone wolves) அதிக ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானுடனான மோதலின் முதல் வாரத்திலேயே அமெரிக்காவில் நான்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் மூவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவமும், மிச்சிகனில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் மற்றும் பள்ளி மீது லெபனானில் பிறந்த நபர் ஒருவர் காரை மோதி நடத்திய தாக்குதலும் அடங்கும். அந்த நபர் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார்.



