News

அரசாங்கத்திற்கு எரிபொருளால் இன்னும் நட்டம்.. 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை.. எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என கூற முடியாது..

போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அவர்கள், எரிபொருள் விலையை அதிகரிக்காமல் பேணுவதற்காக அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிபொருள் நுகர்வில் பெரும்பகுதி தற்போது தனியார் துறையினூடாகவே இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், நட்டத்தில் வியாபாரத்தை முன்னெடுக்க தனியார் துறை தயங்குவதாகவும் குறிப்பிட்டார். இதன் காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையை 140 ரூபா முதல் 200 ரூபா வரை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து அந்தப் சுமையை ஏற்றுக்கொண்டு, சலுகை விலையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார். அதற்கமைய, தற்போது ஒரு லீட்டர் டீசலில் 100 ரூபா நட்டத்தையும், ஒரு லீட்டர் பெற்றோலில் 20 ரூபா நட்டத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்தச் சலுகைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு மாதத்திற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உறுதியற்ற நிலை நிலவுவதால், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மத்தியில் இந்த நட்டத்தைத் தொடர்ந்து தாங்கிக்கொண்டு முன்னோக்கிச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button