உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தா*க்குதலுக்கான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் தான் – இதற்கான 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதிஉதவியை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இப்ராஹிம் ஹாஜியாரே வழங்கினார் ; நூல் வெளியீட்டில் கம்மன்பில அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்காக வெடிகுண்டுகள், குண்டுதாரிகள், தாக்குதல் நடத்தும் இடங்கள், உட்கட்டமைப்பு வசதி, நிதி என சகலவற்றையும் சஹ்ரான் ஹசீமே தேடிக்கொண்டுள்ளார். விசாரணை சாட்சிகளின் அடிப்படையில் சஹ்ரானை தவிர வேறு யாரும் சூத்திரதாரி இல்லை. மேலும் இதற்கான 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான மொஹமட் இப்ராஹிம் அல்லது இப்ராஹிம் ஹாஜியார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் நானாவே வழங்கியுள்ளார் என்று பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்று (31) குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கொழும்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லல் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது ,
சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள பிரதான ஐந்து அறிக்கைகளையும் பகுத்தாய்ந்து வாசித்தேன்.
அதற்கிடையிலேயே 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் திகதி பிள்ளையானை கைதுசெய்தார்கள். பிள்ளையான் கைதுடன் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து பாரிய சூழ்ச்சியொன்று இடம்பெறுகிறது என்பதை நான் அறிந்துகொண்டேன்.
பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை இராணுவ வீரர்கள் மீது சுமத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். இந்த புத்தகத்தில் முக்கியமாக இராணுவ புலனாய்வு பிரிவு ராஜபக்ஷக்களின் வழிநடத்தலில் இடம்பெற்றதாக சொல்லப்படும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்த புத்தகத்தில் பதில் தேட முயற்சித்துள்ளேன்.
ஷானி அபேசேகரவும் ரவி செனவிரத்னவும் இந்த சம்பவத்தில் முக்கியமானவர்கள். ஷானி அபேசேகர இந்த தாக்குதல் சம்பவத்தை இராணுவ வீரர்கள் மீது சுமத்துவதற்கான 11 காரணங்களை அடையாளம் கண்டுள்ளோம்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அபுஹிந்த் பிரதான சூத்திரதாரி இல்லை. சொனிக் சொனிக் பிரதான சூத்திரதாரி இல்லை.சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் பிரதான சூத்திரதாரிகள் இல்லை. இந்தியா, இஸ்ரேல் அல்லது அமெரிக்காவோ பிரதான சூத்திரதாரி இல்லை. அந்த நாடுகளுடன் எமக்கு பிரச்சினை இருக்கலாம். அதற்காக அவர்களை பிரதான சூத்திரதாரிகள் என்றால் அதுவும் அநீதியான விடயமாகும்.
ஏதாவதொரு சம்பவத்தில் குறிப்பாக குற்றச் செயல்களில் ஒரு குற்றத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் நபரே பிரதான சூத்திரதாரி. அப்படியென்றால் இந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் யாருடைய தேவைக்காக யாரினால் திட்டமிடப்பட்டது என்பதற்கான பதிலையே தேட வேண்டும்.
பிரதான சூத்திரதாரியை சரியாக அடையாளம் காண வேண்டுமென்றால் சஹ்ரான் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சஹ்ரானின் சிறு வயது முதல் சில விடயங்களை ஆராய வேண்டியுள்ளது. சஹ்ரானின் தாத்தாவான ஊசி பாய் என்பவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். சஹ்ரான் உள்ளிட்டோர் மட்டக்களப்பிலுள்ள ஹேமமாலா குமரியின் சிலையை சேதப்படுத்தியதிலிருந்தே சிலைகள் சேதப்படுத்தும் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன.
உலகில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பு தோற்றம் பெறுகிறது. வஹாப் வாதிகளின் வீரராக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உருவெடுத்தது. அதன் சூட்டை சஹ்ரானும் ஆரம்பித்துள்ளார். அதேபோல் சஹ்ரான் அன்சார் கிலாபத் என்ற பெயரில் டெல்கிராம் குழுவொன்றை உருவாக்கியுள்ளார்.
அதனூடாக ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைப்பாட்டை இலங்கைக்குள் போதிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அதுவரை சஹ்ரானுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்தாலும் அதுவரை இலங்கையிலுள்ள அநேகமானவர்கள் சிரியா, ஈராக் போன்ற போன்ற நாடுகளுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்காக போராடியுள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்ற பொறியியலாளராக ஜமீல் மொஹமட் என்ற இளைஞர், சிரியாவுக்குச் செல்ல முயற்சித்து துருக்கியிலிருந்து அவரை திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவொன்றை ஆரம்பித்து சிரியாவுக்கு செல்வதற்கான உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.
அதற்காக ஜம்மியத்துல் மில்லா துல் இப்ராஹிம் செய்லானி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார். ஆனால் சிரியாவுக்குச் செல்ல இந்த அமைப்பினருக்கு விசா பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் தாக்குதல் நடத்துவோமென ஜமீல் தீர்மானித்துள்ளார். அதன் பின்னர் சிலர் அந்த அமைப்பிலிருந்து விலக தேசிய தெளஹித் ஜமாஅத் தலைவராக இருந்த சஹ்ரானும் அந்த அமைப்பிலிருந்து குழுவாக நீங்கியுள்ளார்.
இவ்விரு குழுக்களும் இலங்கை முஸ்லிம் மாணவர்கள் முன்னணி அமைப்புடன் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். சிறிலங்கா என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரம்பாவ காட்டுப்பகுதிக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை பின்னால் வைத்துகொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அல் பக்தாதிக்கு ஆதரவு தெரிவிக்கும் பைஅத் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதனை வீடியோவாக பதிவு செய்து சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். காரணம் இந்த சத்தியப் பிரமாணம் செய்து கொண்டால் மாத்திரமே அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அதுவரையில் இலங்கையிலிருந்து சென்றவர்கள் மொஹமட் அரூப் என்பவரே இலங்கையிலுள்ள குழுவின் தலைவர். அரூப், ஜமீலின் நண்பர். அதன் பின்னர் சஹ்ரான் அந்த வீடியோவை ஜமீலுக்கு அனுப்பி அவரினூடாக அரூப்புக்கு அனுப்பியுள்ளார்.அதன் பின்னர் சஹ்ரானும் நவ்பரும் வஹாப் வாதம், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைப் பற்றியும் கற்பித்துள்ளனர். மில்ஹானும், சாதிக்கும் ஆயுத பயிற்சிகளைப் பெற்றுகொடுத்துள்ளனர். கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவரே வெடிகுண்டு தயாரிப்பில் வல்லமை பெற்றவர்.
கொலை செய்வது தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிடும் வீடியோக்களினூடாக ஆயுத பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அவ்வாறு 300 இற்கும் அதிகமானவர்களை தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு வருடத்துக்குள் பயிற்சியளித்துள்ளார்கள்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடனேயே பிரச்சினை ஆரம்பிக்கிறது. அந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே வண்ணாத்திவில்லு பகுதியில் 100 வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான மருந்துகள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி அடிப்படைவாதியொருவர் முஸ்லிம் பள்ளிவாசல்களிலிருந்த 49 வரையான முஸ்லிம்களை தாக்குதல் நடத்தி கொலைச் செய்கிறார்
அதற்கு பதிலளிக்க வேண்டுமென எண்ணிய சஹ்ரான் அதனை சகாகக்ளுக்கும் கூறியுள்ளார். இதற்கிடையில், ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடகப்பேச்சாளர் டெல்கிராமினூடாக நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மேற்குல நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகள் அந்தந்த நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களை பழிவாங்க வேண்டுமென்று கூறுகிறார்.
அதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல அமைப்புகள் ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். முழு உலகையும் முஸ்லிம் இராச்சியமாக்க எண்ணியிருந்தவர் ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகளின் கனவு கலைந்தது. இந்த சம்பவத்திலேயே உடனடியாக கிறிஸ்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
ஆனால் சஹ்ரான் அதுவரை தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றார். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டியில் இடம்பெறவிருந்த இறுதி ரந்தோலி பெரஹரவில், மக்களின் மத்தியிலிருந்து முதற் கட்டமாக ஓரிரு குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்போது அங்கு வைத்து வாகனங்களில் குண்டுவைத்து தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். ஆலோசனைக்கமைய ஏப்ரலில் ஈஸ்டர் தினத்தன்றே தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரான் உள்ளிட்ட 09 பேரே உயிரிழந்துள்ளனர். அவரின் மனைவி பாத்திமா ஹாதியா, மொஹமட் நவ்பர், மில்ஹான் ஆகியோரின் வாக்குமூலங்களில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வெடிகுண்டுகள், குண்டுதாரிகள், தாக்குதல் நடத்தும் இடங்கள், உட்கட்டமைப்பு வசதி, நிதி என சகலவற்றையும் சஹ்ரானே தேடிக்கொண்டுள்ளார்கள். 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முழு நிதியையும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான மொஹமட் இப்ராஹிம் அல்லது இப்ராஹிம் ஹாஜியார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் நானாவே வழங்கியுள்ளார். சாட்சியுடனே இந்த விடயங்கள் குறிப்பிடுகிறேன்.
சகல விடயங்களையும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தியவர் சஹ்ரான் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேசத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவதையே அவர் செய்திருப்பாராக இருந்தால் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசீம் தவிர வேறு யார்? ஆனால் வேறு யாராவது செய்திருக்கலாம் என்று விசாரணையை திசை திருப்ப யாராவது முயற்சிப்பார்களாக இருந்தால் சஹ்ரானே இதனை செய்தார் என்பதற்கு உறுதியான சாட்சிகள் இருக்கின்றன.
சஹ்ரானை தவிர வேறு யாராவது ஒருவர் வேறு நபரின் பெயரை குறிப்பிடுவார்களாக இருந்தால் அவர்களுடன் சாட்சிகளுடன் வாதம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
(நா.தினுஷா)



