சஜித் பிரேமதாச இரட்டை வேடம் போடுகிறாரா..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது மக்கள் அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவர்கள் எதிர்க்கட்சியினர் காட்டும் வேலைகளை நம்பப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு விஜயம் செய்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த நிலையில், உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் சஜித் பிரேமதாச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களில் இரட்டை நிலைப்பாடுகளில் இருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுடன் இணைந்து இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் அவர் கலந்து கொண்டிருந்தது தற்போது மக்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அது ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எதை குறிப்பிட்டிருந்தாலும் உண்மைகளை மறைக்க முடியாது.
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் தற்போது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அவரது கட்சிக்குள்ளேயும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைப் பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்ற இந்த நேரத்தில், அவரது கட்சிக்குள்ளேயே சிலர் இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டதை ஆதரித்து கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் சிலர் அதற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.



