காஸா பூமியில் இஸ்ரேல் வெறியாட்டம் நிகழ்த்திய போது ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை தொடுத்தாவது தனது இருப்பையும் காஸா மக்களுக்கான ஆதரவையும் நிறுவியது….
அரபுலகத்தால் ஒரு சீன வெடிலைத்தானும் இஸ்ரேலை நோக்கி தூக்கிப்போட இயலவில்லை.

சொல்வதை தவிர வேறு வழி இல்லை!
மத்திய கிழக்கு யுத்தம் உலக அளவில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், முஸ்லிம் உம்மத்துகளுக்கு மத்தியில் தேவையற்ற வாதப்பிரதிவாதங்களையும் உண்டு பண்ணியுள்ளது!
அது ஷீஆ மற்றும் சுன்னி பிரிவுகளை அடிப்படையாக கொண்ட சிக்கல்.
இந்த பிரிவினை இன்று நேற்று உருவானதல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னரான காலத்தில் கலீபாக்களை தெரிவு செய்த கட்டங்களில் உருவான அரசியல் முரண்பாடுகள் கால ஓட்டத்தில் முஸ்லிம் உம்மத்தை ஷீஆ மற்றும் சுன்னி கூறுகளாக பிரித்துப்போட்டன.
இந்த சிறு முன்னுரையோடு….
சம காலத்தில் மத்திய கிழக்கு யுத்தத்தில் அமெரிக்க- இஸ்ரேலிய முகாம்களை ஆதரிப்பவர்களும் ஈரானிய முகாமை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
உலக அளவில் அமெரிக்கா செய்த அட்டூழியங்களையும், பாலஸ்தீனத்திலும் அதற்கு வெளியிலும் இஸ்ரேல் புரிந்து வரும் கொடூரங்களையும் சகித்துக்கொள்ள முடியாத மக்கள் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஈரானை ஆதரிக்கிறார்கள்!
வெனிசுலாவில் மதுரோவை ஒரு நுளம்பை அடிப்பதை விடவும் இலகுவாக தூக்கிய அமெரிக்க ஆணவத்தின் தொடர்ச்சியாக ஈரானுடனான போர் வலிந்து இழுக்கப்பட்டது.
ஈரான் தனது ஆன்மீகத்தலைவரையும் மற்றும் முக்கிய தலைகளையும் இழந்த நிலையிலும் அமெரிக்க இஸ்ரேலிய முகாம்களை இன்றளவும் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் வைத்துள்ளது ஈரானின் பலத்தை பறை சாற்றுகின்றது.
மறு புறம் வணக்கத்திற்கு உரிய இறைவன் அழ்ழாஹ்வை தவிர வேறு யாருமில்ல, முஹம்மது நபி இறைவனின் தூதர் என நம்பி சாட்சி பகர்கிறேன் என்று அடிப்படை நம்பிக்கை கொண்ட அரபு உலகம் தங்கள் பாதுகாவலராக அமெரிக்காவையும் சேர்த்து ஈமான் கொண்டு பல தசாப்தங்கள் ஆகின்றன.
அமெரிக்க படைத்தளங்களை தங்கள் நாடுகளில் அமைக்க அங்கீகாரம் கொடுத்தது மாத்திரமல்ல, இஸ்லாம் தடுத்த அத்தனை அநாச்சாரங்களும் அரங்கேறும் பூமியாக அரபுகளின் நிலம் மாறியது.
சினிமா கொட்டகைகள், அரை நிர்வாண ஆடல்பாடல்கள், மதுக்கடைகள் எல்லாம் புனித ஹரம்களின் காவலர்களால் அங்கீகரிக்கப்பட்டன!
அதனை எதிர்த்த உலமாக்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
வாய் மூடி அங்கீகாரம் கொடுத்தவர்கள் வளமாக வாழ்கிறார்கள்.
காஸா பூமியில் இஸ்ரேல் வெறியாட்டம் நிகழ்த்திய போது ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை தொடுத்தாவது தனது இருப்பையும் காஸா மக்களுக்கான ஆதரவையும் நிறுவியது.
அரபுலகத்தால் ஒரு சீன வெடிலைத்தானும் இஸ்ரேலை நோக்கி தூக்கிப்போட இயலவில்லை.
அவர்களால் முடியாது அவர்கள் வஹ்ன் என்கிற உலக ஆசையாலும், கோழைத்தனத்தாலும் கட்டுண்டு வாழ்கிறார்கள்.
இந்த பின்னணியில் நமது நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பலர் பொதுவான மனிதாபிமான நோக்கோடு அமெரிக்க- இஸ்ரேலிய முகாம்களுக்கு எதிரான போரில் ஈரானை ஆதரித்து வருகிறார்கள்.
இதில் சிலர் வழமையான fan boy type ஆதரவையும் காட்டி வருகின்றனர்.
உதாரணமாக அனுர வெல்வார் போல் உள்ளது என்று தெரிந்தால் அனுரவை ஆதரிப்பது, உலக கிண்ண உதைப்பந்தாட்டத்தில் புகழின் உச்சியில் உள்ள மெஸ்ஸியை விரும்புவது, கிரிக்கட்டில் ஒரு நாட்டின் மீது ஆதரவு கொள்வது என்பதெல்லாம் fan boy type ஆதரவு. இதில் கொள்கை, கோட்பாடு, மார்க்கம் எல்லாம் வராது.
சும்மா வெல்கிற பக்கம் அல்லது புகழின் பக்கம் நிற்பது. அந்த சீஸன் முடிந்தால் அனுர யாரோ மெஸ்ஸி யாரோ என்று போய் விடுவது அவ்வளவுதான்.
ஈரான் தொடர்பான fan boy type நிலைப்பாடுகளும் அப்படித்தான் போர் ஓய்ந்தால் போய்விடுவார்கள்.
ஆனால் நேற்றைய சில வெள்ளி மிம்பர் மேடைகளில் இங்கே நிகழ்த்தப்பட்ட பிரசங்கங்கள், ஈரானிய ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் ஷீயாக்களாகவே மாறிவிடுவார்கள் என்ற அச்சத்தை உள் நோக்கமாக கொண்டிருந்தன.
இந்த அச்சம் கலந்த குத்பா உரைகளை நிகழ்த்தியோர் அரபுலகத்தில் அனாச்சாரங்களை பேச மறுக்கின்றனர். அரபுலகத்தின் நயவஞ்சகத்தனத்தை அப்பட்டமாக மறைக்கின்றனர்.
பாலைவனத்தில் ஒரு மிரடு தண்ணீர் கிடைத்தவனை போல ஆறுதல்தான், சியோனிஸ அடக்கு முறைக்கு எதிரான போரில் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் ஒரு நாட்டிற்கு முஸ்லிம்கள் வழங்கும் ஆதரவு.
ஈரான் முற்று முழுதாக முஸ்லிம் அல்லாத தேசமாக இருந்தாலும் கூட முஸ்லிம்கள் தங்கள் பொதுப்புத்தியை பாவித்து இந்த ஆதரவு நிலைப்பாட்டைத்தான் எடுத்திருப்பார்கள்.
ஆகையால் வெவ்வேறு சிந்தனை முகாம்களில் இருக்கும் இஸ்லாமிய போதகர்கள் நிலவர யதார்த்தங்களை புரிந்து செயற்படுதல் அவசியம்.
உருகு நிலையில் இருக்கும் உக்கிர போர் நிலைக்குள் முஸ்லிம் சமூகமும் கடுமையான நிராசையில் இருக்கிறது.
அரபுலகத்தின் அடிமைத்தனத்தையும், அறிவீனத்தையும் உலக முஸ்லிம் சமூகம் வெறுக்கிறது!
இஸ்லாமிய அடிப்படைகளை நன்கு விளங்கியோருக்கு தங்கள் நம்பிக்கையினை பாதுகாத்துக்கொள்ள நன்றாகவே தெரியும்.
அனுரவை ஆதரிக்கிறவன் கம்யூனிஸத்தை தழுவிக்கொள்வான் என்று எங்காவது அச்சப்பட்டீர்களா?
மெஸ்ஸியை விரும்புகிறவன் யூதனாய் போய்விடுவான் என்று எப்போதாவது பயந்தீர்கள?
அப்படித்தான் இந்த யுத்தமும்.
லகும் தீனுகும் வலிய தீன்.
சட்ட முதுமாணி முஜீப் இப்றாஹிம் LL.B (Hons), LL.M (Merits)



