சாய்ந்தமருது சம்பவத்தில் சாரா இறக்கவில்லை :குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகளின் பின்னர், கல்முனையில் கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் (SP) வெளிப்படுத்தும் இரகசியம்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கத்தோலிக்கர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்று. எனினும், ஏழு வருடங்களுக்கு முன்னர் ஒரு உயிர்த்த ஞாயிறு தினம் பெரும் சோகத்துடன் நிறைவடைந்தது.
அது, சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் கத்தோலிக்கர்களை இலக்கு வைத்து நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாகும். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 26 ஆம் திகதி கல்முனை சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரானின் ஆதரவாளர்கள் குழுவொன்று குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டனர். சாரா ஜாஸ்மின் பற்றிய கதை அரங்குக்கு வருவது இந்தச் சம்பவத்திற்குப் பின்னரே ஆகும்.
இந்தச் சம்பவத்தை நன்கு அறிந்தவர், அக்காலத்தில் அந்தப் பிரதேசத்தில், அதாவது கல்முனை பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் பிரியதர்ஷன ஹேரத் ஆவார். கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1990 ஆம் ஆண்டு ஒரு பயிப்பிலுள்ள உதவி பொலிஸ் பரிசோதகராகப் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டார்.
அவருக்கு வழங்கப்பட்டது சாதாரண பொலிஸ் கடமைகள் அல்ல. விசேட அதிரடிப்படையை (STF) ஆரம்பிக்க வருகை தந்த இஸ்ரேலிய பாதுகாப்பு நிபுணர்களிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற பிரியதர்ஷன ஹேரத் உள்ளிட்ட குழுவினர், நேரடியாகவே முரண்பாட்டு வலயங்களுக்கு (Operational zones) அனுப்பி வைக்கப்பட்டனர். அவர் மட்டக்களப்பு, தந்திர்மலை, திம்புலாகலை, வவுனியா, யாழ்ப்பாணம், மாத்தறை, கஹவத்தை போன்ற பல பகுதிகளில் கடமையாற்றியுள்ளார். கஹவத்தை கொட்டகேத்தன பகுதியில் இடம்பெற்ற தொடர் மனிதப் படுகலைகள் காரணமாக அவர் அந்தப் பகுதிக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள பிரியதர்ஷன ஹேரத், இன்று உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் எமக்கு நினைவுக்கு வந்தார். அன்று தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் நடந்தவை குறித்து அவர் முதன்முறையாக வெளிப்படுத்தும் கதை இதுவாகும்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கும் போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
2019 ஏப்ரல் மாதமாகும் போது நான் கல்முனைக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன். கல்முனை, சவலக்கடை, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களும் எனது அதிகார எல்லைக்கு உட்பட்டிருந்தன.
உயிர்த்த ஞாயிறு போன்ற ஒரு தீவிரவாதத் தாக்குதல் அல்லது மோதல் ஏற்படப்போகிறது என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?
இல்லை. அது குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் அது தொடர்பாக எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ அல்லது வேறு எந்த வழியிலுமோ எமக்குத் தகவல்கள் கிடைக்கவில்லை. ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பில் இரண்டு மூன்று இடங்களில் குண்டுகள் வெடிப்பதாக எனக்குச் செய்தி கிடைத்த போது நான் எனது அலுவலகத்தில் இருந்தேன். கொழும்பில் குண்டு வெடிப்பதாகத் தகவல் கிடைத்த போது நேரம் காலை 10 மணியிருக்கும். நான் நீண்ட காலம் முரண்பாட்டு வலயங்களில் (Operation zones) கடமையாற்றியிருப்பதால், எல்.டி.டி.ஈ யுத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அதனால் கொழும்பில் குண்டுகள் வெடிக்கின்றன என்றதும் எனது மனதில் ஒரு சிறிய நடுக்கம் ஏற்பட்டது.
கொழும்பில் குண்டுகள் வெடித்த செய்தியின் உண்மைத்தன்மையை யாரிடம் கேட்டறிந்தீர்கள்?
என்னுடன் மிகவும் நெருக்கமான அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இருந்தார். கொழும்பு குண்டுவெடிப்புப் பற்றி கேட்பதற்கு அவரே தகுதியான நபர் என எனக்குத் தோன்றியது. நான் அவருக்குத் தொலைபேசி அழைப்பை எடுத்தேன். ஏப்ரல் 21 ஆம் திகதி அவருக்கு விடுமுறை. நான் பேசும் போது அந்த அதிகாரி கொழும்பில் இருந்தார். கொழும்பில் இரண்டு மூன்று இடங்களில் வெடிப்பதாகச் சொல்லப்படும் கதை என்னவென்று நான் அவரிடம் கேட்டேன். “சார், அப்படியென்றால் அது சஹ்ரானின் குழுவாகத்தான் இருக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார். எப்படியோ 21 ஆம் திகதி காலை 11 மணியளவில் ஏழு இடங்களில் வெடிப்புக்கள் நிகழ்ந்திருந்தன. அது பற்றித் தெரிந்ததும் எனது உள்ளத்தில் ஒரு விசித்திரமான பயம் ஏற்பட்டது.
எது குறித்து நீங்கள் பயந்தீர்கள்?
கல்முனைப் பகுதிக்குள் நான் தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தேன். நான் கல்முனையில் ஒரு தனி நாட்டில் இருப்பது போல எனக்குத் தோன்றியது. கல்முனை என்பது முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதி. சட்டத்தை மதிக்காதவர்கள் அங்கு இருந்தார்கள். தலைக்கவசம் (Helmet) அணிந்து செல்வதில்லை. பொலிஸ் அதிகாரிகளைப் பொருட்படுத்துவதில்லை. நான் சென்ற பின்னரே கல்முனையில் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நிர்வாகத்தைக் கொண்டு வந்தேன். அவ்வாறு தீவிரவாதிகள் கொழும்பைத் தகர்த்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், கல்முனையின் பாதுகாப்பு குறித்து எனக்குப் பயம் ஏற்பட்டது.அந்தப் பயத்திற்கு ஒரு பெரிய காரணமும் இருந்தது.
என்ன அந்த காரணம்?
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தைத் தகர்த்தது மொஹமட் ஆசாத். அவர் ஒரு முஸ்லிம். அந்தத் தாக்குதலில் அதிகளவில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள். அதற்குப் பதிலடியாக மட்டக்களப்பு தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால் என்ன நடக்கும்? இந்தத் தாக்குதல்கள் பட்டாசுச் சரம் போலத் தொடரும் என்று எனக்குத் தெரியும். கிழக்கு மாகாணத்தின் அமைவிடமானது ஒரு ‘சான்ட்விச்’ (Sandwich) போன்றது. ஒரு பகுதியில் தமிழ் மக்கள், அடுத்த பகுதியில் முஸ்லிம் மக்கள், மீண்டும் தமிழ் மக்கள், மீண்டும் முஸ்லிம் மக்கள் என கிழக்கு மாகாணத்தின் அமைப்பு அவ்வாறுதான் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் ஆவேசமடைந்து கல்முனை முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் மக்கள் ஆவேசமடைந்தால், கண்டிப்பாக அங்கு இரண்டு மூன்று தற்கொலை குண்டுதாரிகளாவது இருப்பார்கள். அப்படி நடந்தால் நிலைமை இன்னும் பயங்கரமாகும். எனவே கல்முனைப் பிரதேச மக்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று எனது சிரேஷ்ட அதிகாரிகளிடம் கூறினேன். அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஏற்பட்ட நிலைமை ஓரளவு தணியும் வரை கல்முனையின் பாதுகாப்பை பலப்படுத்தினோம். வீதித் தடைகளை ஏற்படுத்தினோம். சோதனைகளை நடத்தினோம். எந்தவொரு முஸ்லிம் மனிதனுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். எப்படியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை குறித்து நான் பெரும் அச்சத்தில் இருந்தேன்.
வெள்ளிக்கிழமை பற்றி ஏன் விசேட பயம் ஏற்பட்டது?
வெள்ளிக்கிழமை என்பது முஸ்லிம் பக்தர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் நாள். அந்த நாளைப் பார்த்து ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நினைத்துப் பார்க்க முடியாத அளவு அழிவு ஏற்படும் என்று எனக்குத் தெரியும். எனவே அந்தப் பள்ளிவாசல் தினத்தன்று அதிகாலை முதல் மாலை வரை அந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று சிவில் பாதுகாப்பு குழுக்களைத் தெளிவுபடுத்தினேன். அடையாளம் தெரியாத வாகனங்கள், அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அவ்வாறு சந்தேகத்திற்கிடமான விடயம் அல்லது நபர் பற்றித் தகவல் தெரிந்தால் எமக்குத் அறிவிக்குமாறும் ஒவ்வொருவரிடமும் கூறினோம். உண்மையில் நாம் கூறியது போலவே கல்முனை மக்கள் மிகவும் அவதானமாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டார்கள். பள்ளிவாசல்களிலும் அது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்கள். நாம் கஷ்டப்பட்டு மக்களைத் தெளிவுபடுத்தியதால் எந்தக் கெடுதலும் நடக்கவில்லை. அது பற்றி நான் முன்னால் சொல்கிறேன். எப்படியிருந்தாலும் 21 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி மாலை வரை மக்களைத் தெளிவுபடுத்துதல் மற்றும் சோதனைகளை நடத்தும் பணிகளை மேற்கொண்டோம்.
சம்மாந்துறைப் பகுதியில் 26 ஆம் திகதி பகல் சோதனைகள் மற்றும் தெளிவுபடுத்தல்களை நிறைவு செய்தோம். மாலை நான்கு மணியளவில் நான் மதிய உணவு உண்பதற்காக கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றேன். உணவை கையில் எடுக்கும் போதே எனது நேரடி மேலதிகாரியான அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜேசேகர அவர்கள் எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு எடுத்தார்.
அவர் உங்களுக்கு என்ன கூறினார்?
சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீடு பற்றிய தகவல் கிடைத்துள்ளது. விரைவில் சம்மாந்துறை சுப்பர் மார்க்கெட் அருகிலுள்ள சந்திக்கு வருமாறு அவர் எனக்குக் கூறினார். அந்த அழைப்பிற்கு இணங்க நான் குறிப்பிட்ட இடத்திற்குப் புறப்பட்டேன். சமந்த விஜேசேகர அவர்கள் அம்பாறையிலிருந்து அந்த இடத்திற்கு வரப் புறப்பட்டிருந்தார்.அம்பாறையிலிருந்து அவர் அந்த இடத்திற்குப் புறப்பட்டிருந்தார். அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் அவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நாங்கள் இருவரும் குறிப்பிட்ட அந்தச் சந்தியில் சந்தித்துக்கொண்டோம். பின்னர் நாங்கள் இருவரும் அந்த வீட்டிற்குச் சென்றோம். ஆனால், அந்த இடத்திற்கு நாம் செல்வதற்கு முன்பாக, குறித்த வீடு தொடர்பான தகவல் உண்மையானதா என்று பார்க்க அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் லசந்த தடல்லகேவை சமந்த விஜேசேகர அங்கு அனுப்பி வைத்திருந்தார்.
அந்தச் சந்தேகத்திற்குரிய வீட்டில் ஒரு குழுவினர் வாடகை அடிப்படையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறதே?
ஆம். செந்நெல் கிராமத்தின் கடை வீதியின் வலதுபுறமாக அமைந்துள்ள பவுசி மாவத்தையில் உள்ள ஒரு வீட்டிற்கே நாங்கள் சென்றோம். இஸ்மாயில் லெப்பை அப்துல் ரஹீம் என்பவருக்குச் சொந்தமான அந்த வீடு வேறொரு குழுவினருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த வீட்டின் வாகன தரிப்பிடம் (Garage) மடிக்கக்கூடிய கதவொன்றினால் மூடப்பட்டிருந்தது. அந்த கராஜிற்குள் ஏதோ சந்தேகத்திற்குரிய விடயம் இருப்பதை நாங்களும் உணர்ந்தோம். எனவே, விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அந்தக் கராஜின் கதவை உடைத்தோம். அங்கு பெருமளவிலான சொத்துக்களுடன் சல்பூரிக் அமிலக் கேன்கள், ஏனைய இரசாயனப் பொருட்கள் அடங்கிய பல கேன்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் இருந்தன. அதேபோல், ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பயங்கரவாதிகள் சத்தியப்பிரமாணம் செய்த போது சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் அணிந்திருந்த உடைகளின் பாகங்கள் மற்றும் பதாகையையும் (Banner) நாம் கைப்பற்றினோம்.
சுமார் அரை மணிநேரம் கழிந்த பின்னர், அம்பாறை 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளின் குழுவும் அங்கு வந்தது. இலங்கை இராணுவத்தினால் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பின்னர் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் உண்மையில் அந்த ஆயுதங்களைக் கண்டுபிடித்தது இலங்கை பொலிஸார். அதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். ஏனெனில் அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் பிரதானி என்ற ரீதியில் அன்றைய தினம் நானும் அங்கு இருந்தேன். அனைத்தையும் ஒரு அணுவளவும் குறையாமல் எனது சொந்தக் கண்களால் பார்த்தேன். எப்படியோ, இராணுவத்தினருடனும் இணைந்து நாம் கராஜின் கதவை உடைத்துக் கண்டுபிடித்த அந்தப் பொருட்களை மிகவும் பாதுகாப்பாகப் பொதி செய்தோம்.
அதன் பிறகு என்ன நடந்தது?
நாங்கள் செந்நெல் கிராமத்தின் பவுசி மாவத்தையில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்தபோது, நிந்தவூர் பகுதியிலுள்ள சந்தேகத்திற்குரிய ஒரு வீடு குறித்தும் தகவல் கிடைத்தது. அதன்படி பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜேசேகர அங்கு சென்றார். நிந்தவூர் அமைந்திருந்தது நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே…பவுசி மாவத்தையிலிருந்து சுமார் ஏழு அல்லது எட்டு கிலோமீட்டர் தொலைவிலேயே அது அமைந்திருந்தது. அதாவது அந்தத் தீவிரவாதிகள் மிக அருகிலேயே இருந்திருக்கிறார்கள் என்பது இதன் அர்த்தம். அந்த வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருந்தது என அறியக் கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் வீட்டிற்குள் எவரும் இருக்கவில்லை. வீட்டின் ஆங்காங்கே ஆடைப் பைகள் இருந்தன. பிளாஸ்டிக் கொள்கலன்கள், குளிரூட்டி (Fridge), சலவை இயந்திரம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டில் இருந்த அனைவரும் தப்பி ஓடியிருந்தனர். காணியின் ஓரத்தில் உள்ள கராஜில் பதிவு செய்யப்படாத சிறிய ரக மோட்டார் கார் ஒன்றும் இருந்தது. நாம் செந்நெல் கிராமத்தில் உள்ள வீட்டைச் சோதனையிடுகிறோம் என்ற தகவல் கிடைத்த பின்னர், சந்தேகநபர்கள் பதற்றமடைந்து தப்பிச் சென்றிருக்கலாம். இந்த எல்லாச் சம்பவங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. நான் ஒரு எழுத்து கூட விடாமல் எல்லாவற்றையும் சொல்வது அதனால்தான்.
சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரானின் குழுவினர் குண்டுகளை வெடிக்கச் செய்த சம்பவத்தை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?
26 ஆம் திகதி கல்முனைப் பிரிவு முழுவதிலும் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் சென்று தெளிவுபடுத்தியதால் எந்தக் கெடுதலும் நடக்கவில்லை என்று நான் முதலில் உங்களிடம் கூறியது நினைவிருக்கிறதா? 26 ஆம் திகதி நான்கு இளைஞர்கள் பள்ளிவாசல் சென்று விட்டுத் திரும்பும் போது, வொலிவேரியன் சுனாமி கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் குழுவாக இருப்பதைப் பார்த்துள்ளனர். அந்த நான்கு இளைஞர்களும் அங்கிருந்து மீண்டும் வரும் போதும் அந்தப் பிரிவினர் அதே இடத்திலேயே இருந்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தாலோ அல்லது சந்தேகத்திற்குரிய ஏதேனும் நடந்தாலோ அறிவிக்குமாறு நாம் அனைவரையும்
தெளிவுபடுத்தியிருந்தோம் அல்லவா? இதனால் அந்த நான்கு இளைஞர்களும் அந்த வீட்டிற்குச் சென்று “நீங்கள் யார்?” என்று அந்த அடையாளம் தெரியாத நபர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த குழுவில் இருந்த ஒருவர் இந்த நான்கு இளைஞர்களையும் பயமுறுத்தி விரட்டியுள்ளார். அந்த வீட்டின் ஓரிடத்தில் துப்பாக்கி ஒன்று சாத்தி வைக்கப்பட்டிருந்ததை அந்த இளைஞர்கள் கண்டிருக்கிறார்கள். அதன்படி மட்டக்களப்பு – அக்கரைப்பற்று பிரதான வீதிக்கு ஓடிவந்த அந்த நான்கு இளைஞர்கள், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் இது பற்றி கூறியுள்ளனர். அதன்படி பொலிஸ் அதிகாரி ஒருவருடன் மீண்டும் அந்த நான்கு இளைஞர்களும் அந்த வீடு இருக்கும் பக்கமாகச் சென்றுள்ளனர். ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால், பொலிஸ் அதிகாரியும் அந்த நான்கு இளைஞர்களும் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஓடியிருக்க வேண்டும். அவ்வாறு ஓடிய இளைஞர்களில் இருவர் அருகில் இருந்த கார்த்திவு இராணுவ முகாமிற்கும் இது பற்றி கூறியுள்ளனர்.
அதன் பின்னர் என்ன நடந்தது?
அந்த நான்கு இளைஞர்களில் இருவர் இராணுவ முகாமிற்கும் இது பற்றி கூறியிருந்தனர் அல்லவா? அதன்படி எமக்கு முன்னரே இராணுவ அதிகாரிகள் குழுவொன்று குறிப்பிட்ட இடத்தை முற்றுகையிட வந்திருந்தது. நாம் வொலிவேரியன் கிராமத்திற்குள் நுழையும் இடத்திலுள்ள சிறிய இரும்புப் பாலத்திற்கு அருகில் நின்றோம். இந்தச் சம்பவம் நடக்கும் போது மாலை நாலரை மணியிருக்கும். ஆனால் சூழல் முழுவதும் பெரும் இருள் சூழ்ந்திருந்தது. “இராணுவத்தினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எவரையும் பாலத்திற்கு அப்பால் செல்ல அனுமதிக்க முடியாது, வீதி மறிக்கப்பட்டுள்ளது” என்று இராணுவத்தினர் கூறினர். அதனால் நாம் இரும்புப் பாலத்திற்கு அருகிலேயே காத்திருந்தோம்.இதனால் கிராமத்திற்குள் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய தீப்பிழம்பு ஒன்றை எம்மால் காண முடிந்தது. வெடிப்புச் சத்தங்களும் கேட்டன. நாம் நின்று கொண்டிருந்த பாலத்திலிருந்து சுமார் 150 அல்லது 200 மீற்றர் தொலைவிலேயே இந்தச் சம்பவம் நடந்தது.
கல்முனைப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக இருந்தும் உங்களால் ஏன் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை?
அப்போது அந்த கிராமம் இருந்த பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. துப்பாக்கிச் சூடு, வெடிப்பு மற்றும் தீப்பரவல் காரணமாக பெரும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அதனால் இரும்புப் பாலத்திற்கு அப்பால் எவரையும் செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவத்தினர் அறிவித்தனர். அதுமட்டுமன்றி, மாலை 5:30 அல்லது 6:00 மணியளவில் அந்தப் பகுதி முற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. அனைவரதும் நலன் கருதி இராணுவத்தினர் அந்தப் பாதையை மறித்திருந்தனர். நான் மட்டுமல்ல, பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜேசேகர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆயாச கருணாரத்ன, இரண்டு தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட சுமார் 20 பேர் பாலத்தின் இந்தப் பக்கத்திலேயே நின்றோம். மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் அன்றைய கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும் அங்கிருந்தனர்.
அப்படிச் சொன்னாலும் கிராமத்தின் பக்கத்திலிருந்து பாலத்தை நோக்கி ஒரு பச்சை நிறத் த்ரிவீலர் வந்ததல்லவா?
ஆம். முதலில் கிராமத்தின் பக்கத்திலிருந்து நாம் இருந்த பாலத்தை நோக்கி ஒரு வயது முதிர்ந்த நபர் வந்தார். அவரிடமிருந்து எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர் பாலத்தின் இந்தப் பக்கத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதற்குச் சற்று நேரத்தின் பின்னர் கிராமத்தின் பக்கத்திலிருந்து ஒரு பச்சை நிறத் த்ரிவீலர் வந்தது. கிராமத்திலிருந்து வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் த்ரிவீலர் ஒன்று வந்ததால், அது தற்கொலைத் தாக்குதலாக இருக்குமோ என்று எமக்கு அச்சம் ஏற்பட்டது. அந்தத் த்ரிவீலர் விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு வேகமாகப் பாலத்தை நோக்கி வந்தது. “வரவேண்டாம், சுடுவோம்” என்று இராணுவத்தினர் சத்தமிட்டனர். அதனைத் தமிழிலேயே கூறினார்கள். அது சற்று நேரம் நின்றுவிட்டு மீண்டும் எமது பக்கமே வந்தது. அந்தத் த்ரிவீலர் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் இராணுவத்தினர் அதை நோக்கிச் சுட்டனர்.
அதன் பின்னர் என்ன நடந்தது?
அந்த வீடு இருந்த திசையிலிருந்து நாம் இருந்த பக்கத்திற்கு நேர் எதிர் திசையில், அதாவது இரும்புப் பாலத்தை நோக்கி அல்லாமல் மறுபுறமாக ஒரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாகச் செல்லும் சத்தம் எமக்குக் கேட்டது. அந்த மோட்டார் சைக்கிள் சவலக்கடை பக்கமாகச் சென்றது. வெடிப்புச் சம்பவம் நடந்த அந்த வீட்டிற்குப் பின்னால் இன்னொரு வீதி உள்ளது. அந்த வீதியூடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் செல்ல முடியும். பைக் ஒன்றை ‘ரேஸ்’ (Race) செய்யும் போது வரும் சத்தத்தை வைத்து அதன் வேகத்தை எம்மால் ஊகிக்க முடியும். அதன்படி, வெடிப்பு நடந்த வீட்டின் பக்கத்திலிருந்து சென்றது ஒரு சாதாரண மோட்டார் சைக்கிள் அல்ல, அது ஒரு அதிதிறன் கொண்ட (High-power) மோட்டார் சைக்கிள் என்பதை அந்தச் சத்தத்தை வைத்து நான் புரிந்துகொண்டேன். துப்பாக்கிச் சமர் நடந்த இடத்தில் மட்டுமல்ல, பிரதான வீதிகளிலும் கூட அந்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. சுற்றுப்புறம் அமைதியாக இருந்ததால் அந்த மோட்டார் சைக்கிளின் சத்தம் அனைவருக்கும் நன்றாகக் கேட்டது. ஆனால் இப்போது எவரும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதாகச் சொல்லமாட்டார்கள். நான் மட்டுமே அதைப் பற்றிப் பேசுகிறேன். எப்படியிருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு வாகனம் கிராமத்திலிருந்து வெளியே செல்வது கேட்டது. “போக விடாதீர்கள், போக விடாதீர்கள்” என்று இராணுவத்தின் அல்லது பொலிஸின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அப்போது சத்தமிட்டார். அந்தச் சத்தம் தேய்ந்து செல்லும் போது “போய்விட்டது, போய்விட்டது” என்று சொல்வதும் எனக்குக் கேட்டது. ஆனால் எவருக்கும் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த வேண்டிய தேவையோ அல்லது திறமையோ அந்த நேரத்தில் இருக்கவில்லை.
சவலக்கடை ஊடாகச் செல்லக்கூடிய வேறு பகுதிகள் எவை?
சவலக்கடையைக் கடந்து மண்டூர் ஊடாகக் களுவாஞ்சிகுடிக்குச் செல்ல முடியும். களுவாஞ்சிகுடி என்பது சாரா ஜாஸ்மினின் ஊர். அந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது சாரா ஜாஸ்மினாகக் கூட இருக்கலாம். ஏனெனில் சாய்ந்தமருது வீட்டு வெடிப்பில் சாரா இறக்கவில்லை. அவரது உடல் அந்த வீட்டில் இருக்கவில்லை. ஆனால் அவ்வளவு வேகத்தில் சாரா தனியாக குறுக்கு வீதிகளூடாக பைக் ஓட்டிச் செல்ல முடியாது. சென்றது சாராவாக இருந்தால் அவருக்கு யாராவது உதவி செய்திருக்க வேண்டும்.
நன்றி அருன..

