தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள்தான் – இதற்கு முன் மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்த வாக்குப் பலத்தை நாம் வீணடித்துவிட்டோம்.. இம்முறை அதனை வினாடிக்காமல் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம்
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப் புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப் பலம் பேரம் பேசக்கூடிய பெரும் சக்தியாக இருந்தது. இப்போது எம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆயுதம் வாக்குகள்தான். யுத்தத்தின் பின்னரான கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்த வாக்குப் பலத்தை நாம் வீணடித்துவிட்டோம்.
இம்முறையாவது அவற்றை இலக்குத் தவறாது பிரயோகிப்போம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கழமை (08.09.2024) ஏழாலை ஐக்கிய நாணயசங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழினம் அரசியல் ரீதியாக மிகமோசமாக பலவீனம் அடைந்துள்ளது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தை வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஊடாகச் சட்டரீதியாகக் கையகப்படுத்தி வருகின்றது. தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்களை, பொருளாதாரத்தை, பண்பாட்டைத் திட்டமிட்டுச் சிதைத்து வருகின்றது.
இவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பைக் கனகச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.
தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சினையாக மாத்திரமே உலகுக்குக் காட்டி வருகின்றார்கள்.
இலங்கைத் தீவில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்குத் தமிழ் மக்கள் மீது தொடுத்த யுத்தமே மூலகாரணம் ஆகும். மாறி மாறி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் கடன் வாங்கி யுத்தத்தை முன்னெடுத்தமையே நாட்டைப் பொருளாதாரப் படுகுழிக்குள் தள்ளியது. ஆனால், இந்தக் கசப்பான உண்மையை ஏற்க எந்தத் தென்னிலங்கைத் தலைவர்களும் தயாராக இல்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் நாம் விட்ட தவறுகளைத் தொடர்ந்தும் இழைத்துக் கொண்டிருக்க முடியாது. இதனைக் கருத்திற் கொண்டே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் பா. அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனிநபர் அல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசத்தினதும் குரல். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சங்குச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் என்றும் தெரிவித்தார்.
பு.கஜிந்தன்