ஈரானின் 10 அம்ச கோரிக்கைகள் நடைமுறைக்கு சாத்தியமானவையாக இருக்கும் என்று நான் நம்புறேன் – ஈரானுடன் நீண்டகால அமைதிக்கு தீர்க்கமான ஒப்பந்தத்தை பாகிஸ்தானில் நடத்துவது தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்தவை ஒரு பார்வை..

ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளின் முன்மொழிவின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஈரானிய நாகரிகத்தையே முடிவுக்குக் கொண்டுவருவதாக விடுத்த எச்சரிக்கையை நிறுத்தி வைப்பதாகவும், அந்நாட்டின் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு “தற்காலிகமாக நிறுத்துவதாகவும்” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து புதன்கிழமை இந்த அறிக்கை வெளியானது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் பாதையான, வளைகுடாவை அரபிக்கடலுடன் இணைக்கும் குறுகிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை “முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறக்க” ஈரான் ஒப்புக்கொள்வதைப் பொறுத்தே இந்த போர்நிறுத்தம் அமையும் என்று டிரம்ப் கூறினார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் விதித்த ஜலசந்தியின் பகுதி முற்றுகை, உலகளாவிய வர்த்தகத்தைப் பாதித்து, எண்ணெய் விலையை உயர்த்தியதுடன் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் வளைகுடா முழுவதும் எதிரொலித்ததுடன், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹூதிக்களையும் இதில் ஈடுபடுத்தியது.
இவ்விரு அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது மோதலை கணிசமாக விரிவுபடுத்தியது.
அமெரிக்கா ஏற்கனவே தனது இராணுவ இலக்குகள் அனைத்தையும் “எட்டிவிட்டது மற்றும் அதைவிட அதிகமாகவே சாதித்துள்ளது” என்றும், “ஈரானுடன் நீண்டகால அமைதி தொடர்பான தீர்க்கமான ஒப்பந்தத்தை நோக்கி நாங்கள் வெகுதூரம் முன்னேறியுள்ளோம்” என்றும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளதாகவும், “அது பேச்சுவார்த்தைக்கு ஒரு நடைமுறைக்கு சாத்தியமான அடிப்படையாக இருக்கும் என்று நம்புவதாகவும்” டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் “கிட்டத்தட்ட அனைத்து கருத்து வேறுபாடுகளிலும்” உடன்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு வார காலம் ஒப்பந்தத்தை “இறுதி செய்யவும் முழுமைப்படுத்தவும்” அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, தெஹ்ரானின் இந்த உடன்பாட்டை உறுதிப்படுத்தினார்.
“ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்களது வலிமைமிக்க ஆயுதப்படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்,” என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானிய ஆயுதப்படைகளின் ஒருங்கிணைப்புடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்றும், “ஈரானின் 10 அம்ச முன்மொழிவின் பொதுவான கட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக” டிரம்ப் ஏற்றுக்கொண்டதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரக்ச்சி கூறினார்.
பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வார காலம் போரை முடிவுக்குக் கொண்டு வராது 10 அம்சத் திட்டம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே போரின் முடிவை ஈரான் ஏற்கும்.
ஈரான் விதித்த 10 நிபந்தனைகள்.
🔴ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என்ற கொள்கைக்கு அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும்.
🔴ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீதான கட்டுப்பாட்டை ஈரான் தக்க வைத்துக் கொள்ளும்.
🔴யூரேனியம் செறிவூட்டலை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும்.
🔴ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து முதன்மைத் தடைகளையும் நீக்க வேண்டும்.
🔴அதே போன்று அனைத்து இரண்டாம் நிலைத் தடைகளையும் நீக்க வேண்டும்.
🔴ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்ய லேண்டும்.
🔴சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆளுநர்கள் குழுவின் அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்யவேண்டும்.
🔴ஈரான் பெற்ற இழப்பீடுகளுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும்..
🔴வளைகுடா பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் போர் படைகளைத் திரும்பப் பெறுதல் வேண்டும்.
🔴லெபனானில் உள்ள எதிர்ப்புப் படைகளுக்கு எதிரானது உட்பட, அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல் வேண்டும்.



