News

போர்நிறுத்தம் காற்றில் பறந்தது: லெபனானில் இஸ்ரேலின் பெரும் இனப்படுகொலை.. 250 பேர் உடல்சிதறி பலி.. ஆயிரக்கணக்கானோர் காயம்..

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் லெபனானைக் குறிவைத்து தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 254 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 நிமிடங்களுக்குள் 100 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. லெபனானின் தலைநகரான பெய்ரூட், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் இத்தாக்குதலின் முக்கிய இலக்குகளாக இருந்துள்ளன. நகரத்தைச் சுற்றி ஒரு “நெருப்பு வளையத்தைப்” போலத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதனால் குடியிருப்பு கட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் வர்த்தகப் பகுதிகள் பல அழிந்துள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே இரண்டு வார கால போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு இஸ்ரேலிய அரசியல் தலைமை தனது இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதுடன், நிலைமை ஒரு “மாபெரும் இனப்படுகொலைக்கு” சமமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பல பகுதிகளில் தாக்குதலுக்கு முன்னர் எவ்வித முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தருணத்தில் இத்தகைய தாக்குதலை நடத்துவது நம்பமுடியாத ஒன்று எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த கொடூரமான படுகொலைகளைக் கண்டித்துள்ளார்.

Recent Articles

Back to top button