சிறிய அளவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும் ..

எரிசக்தி துறையில் ஒரு நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் உரையின் முக்கிய அம்சங்கள்:
• எரிபொருள் நெருக்கடி: “சக்தி துறையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இன்றும் ஒரு லீட்டர் டீசல் 382 ரூபாவாக உள்ளது. அரசாங்கம் விற்பனை செய்யும் ஒவ்வொரு லீட்டர் எரிபொருளுக்கும் தலா 100 ரூபா வீதம் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் மானியம் வழங்குகின்றது. இன்று நீங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து 382 ரூபாவிற்குப் பெற்றுக்கொள்ளும் ஒரு லீட்டர் டீசலின் உண்மையான விலை 482 ரூபாவாகும். அந்த 100 ரூபாவை அரசாங்கமே செலுத்துகின்றது. இது மக்களைக் கவனிக்கும் ஒரு அரசாங்கம்.”
• நிதியொதுக்கீடு: “எரிபொருள் விலைகள் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்நாட்டு மக்களுக்குத் தேவையான எரிபொருள் மானியத்தை வழங்குவதற்காக நாம் 6000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளோம். உழைக்கும் மக்களின் அரசாங்கங்கள் அப்படித்தான் செயற்படும்.”
• விலை உயர்வுக்கான காரணங்கள்: “எரிபொருள் விலைகள் மேலும் அதிகரித்து வருவதால், சிறிய அளவிலான விலை அதிகரிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். எனினும், அதிகபட்சமான மானியங்களை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நிலக்கரி விலை அதிகரித்துள்ளது, எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. அதேபோல் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே ஒரு விலை அதிகரிப்பைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.”
• மின்சாரக் கட்டணச் சலுகை: “மின்சாரப் நுகர்வோரில் 96 சதவீதமானோருக்கு எந்தவித விலை அதிகரிப்பும் இன்றி மானியம் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். அதற்காக 1500 கோடி ரூபாவைச் செலவிடவும் முடிவு செய்துள்ளோம்.”


