கண்டி நோக்கி பயணித்த கார் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் இருந்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியினை விட்டு விலகி சுமார் 300அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஒயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (17) காலை 8 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தின்போது சம்பவ இடத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்கள் பலாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்த ஆணின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பிலும் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



