ஒரு சதமும் தர முடியாது.. வழக்குத் தொடருங்கள்.. நாட்டைச் சீரழித்த லாலுக்கு இழப்பதற்கு என்ன கௌரவம் இருக்கிறது? – ஹிரு லாலுக்கு கடிதம் ..

ஏசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (தனியார்) நிறுவனம் (ஹிரு டிவி), அண்மையில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தொடர்பாக விடுக்கப்பட்ட சட்ட அறிவித்தலுக்கு (Enjoinment/Letter of Demand) பதிலளிக்கையில், அந்தச் செய்தியில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எந்தவிதமான தீய எண்ணத்துடனும் அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
சுதத் பெரேரா அசோசியேட்ஸ் சட்டத்தரணிகள் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஏப்ரல் 16ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட செய்தியில், சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரக் கணக்கீட்டில் தவறு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட ஊடக நிறுவனம், ஏப்ரல் 18ஆம் திகதி தனது அனைத்து ஊடக வலையமைப்புகளின் ஊடாகவும் (ஹிரு டிவி, ஹிரு எஃப்எம், ஷா எஃப்எம் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட) அந்தத் தவறுகளைத் திருத்தி பகிரங்கப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக அறிக்கையிடல் மூலம் எவருக்கும் அவதூறு ஏற்படுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கம் இருக்கவில்லை என்றும், தவறு நிகழ்ந்ததை அறிந்தவுடன் தானாக முன்வந்து மன்னிப்புக் கோரி, அதனைத் திருத்த நடவடிக்கை எடுத்ததாகவும் சட்டத்தரணி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்ட அறிவித்தலில் கோரப்பட்டுள்ள நட்டயீட்டுத் தொகையைச் செலுத்தத் தமது தரப்பினர் கடமைப்பட்டவர்கள் அல்ல என்றும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, லால் காந்த அவர்கள் சமர்ப்பித்துள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் அறிக்கை சட்டபூர்வமானது அல்ல என்றும், அதில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதன் படி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால், அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவிதமான “நற்பெயரும்” இல்லாத ஒரு நபர் என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவோம் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமது நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தடுக்க எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயச் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடக சுதந்திரம் மற்றும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளுக்கு முரணாகச் செயற்பட எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகத் தாம் உறுதியாக நிற்போம் என ஹிரு ஊடக வலையமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.



