News

கல்வி மற்றும் மத்ரஸா தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இதோ ..

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக முறையான பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் .

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கல்வி , மத்ரஸா குடியேற்றம் உள்ளிட்ட அறிக்கையின் பரிந்துரைகள் இவைதான்

கல்வி

1. பௌத்த, கிறிஸ்தவ, இந்து அல்லது இஸ்லாம் என மத ரீதியாகப் பாடசாலைகளை வகைப்படுத்துவதற்குப் பதிலாக, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளையும் சர்வதேச பாடசாலைகளையும் எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.ஒவ்வொரு பாடசாலையிலும் நாட்டின் மதப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் மாணவர் சமூகம் இருக்க வேண்டும்.

2. தற்போதுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மத ரீதியான வகைப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். தேசிய, மாகாண மற்றும் சர்வதேச பாடசாலைகளில் அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கற்கும் ஒரு கலப்புப் பாடசாலை முறைமையை உருவாக்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

3. அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும், அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும் “சமயக் கல்வி” என்ற புதிய பாடத்தைக் கற்பிக்க வேண்டும். இதில் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் அடிப்படைக் கருத்துக்கள் தரம் 1 முதல் 10 வரை கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும்.

4. தேசிய, மாகாண மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்காக வெளியிடப்படும் அனைத்து சமயக் கல்விப் புத்தகங்களிலும் ஏதேனும் தீவிரவாத அல்லது பயங்கரவாதக் கருத்துக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியப் பரிசோதிக்க வேண்டும்.

5. இலங்கையில் உள்ள இஸ்லாமிய கல்விப் புத்தகங்களின் உள்ளடக்கத்தை உடனடியாக மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தீவிரவாதக் கருத்துக்களைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

6. மத நல்லிணக்கம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

7. நாட்டில் 5 வயது முதல் 18 வயது வரையிலான அனைத்துக்குழந்தைகளும் “அங்கீகரிக்கப்பட்ட அரச அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில்” கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு வீடுகளில் மட்டும் கல்வி கற்பிக்கக் கூடாது.

8. அனைத்துக் குழந்தைகளும் 13 ஆம் தரம் வரை தடையின்றி கல்வி கற்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

9. பௌத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாமிய கலாசாரம், இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், இசை மற்றும் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய பாடத்தை அனைத்து மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

10. கல்வி வெளியீடுகள் ஒழுங்குமுறை சபையினால் அனைத்துக் கல்விப் புத்தகங்களும் மீளாய்வு செய்யப்பட்டு, தீவிரவாதக் கருத்துக்கள் இருப்பின் அவை நீக்கப்பட வேண்டும்.

11. கல்வி நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களின் தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும்.

12. தீவிரவாத மற்றும் பயங்கரவாதக் கருத்துக்கள் கற்பிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தனியார் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து சமயக் கல்வி போதனைகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

மத்ரஸாக்கள் (குர்ஆன் பாடசாலைகள்)

1. அனைத்து மத்ரஸாக்களும் (குர்ஆன் மத்ரஸாக்கள், ஹிஃப்ழ் மத்ரஸாக்கள் மற்றும் அரபு கல்லூரிகள்) முறையான சட்டக் கட்டமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதோடு, அரசியலமைப்பு ரீதியான அதிகாரியால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். பங்களாதேஷின் 1978 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க மத்ரஸா கல்விச் சட்டத்தை, இலங்கைக்கு ஏற்ற சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம். இந்த ஒழுங்குமுறை கட்டமைப்பின் ஒரு பகுதியாக இல்லாத எந்தவொரு மத்ரஸாவும் நாட்டுக்குள் இயங்கக்கூடாது.

2. பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து மத்ரஸாக்களும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முஸ்லிம் சனத்தொகையைக் கருத்தில் கொண்டு ஒரு பகுத்தறிவுத் திட்டம் நிறுவப்பட வேண்டும் என்பதோடு, சனத்தொகைக்கு ஏற்ப ஒரு விகிதாசாரம் கணக்கிடப்பட வேண்டும்.

3. சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை அளிப்பதன் மூலம், நாடு முழுவதும் உள்ள மத்ரஸாக்களில் கற்பித்தல் ஊடகத்தில் ஒரு குறிப்பிட்ட/சாத்தியமான விகிதாசாரத்தைப் பேணுதல்.

4. அனுமதி பெறுவதற்கு ஒரு தரப்படுத்தப்பட்ட தகுதிக்கணிப்பு இருக்க வேண்டும் என்பதோடு, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அனுமதித் தகுதியாகக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

5. மத்ரஸாக்களில் ஆங்கிலத்துடன் சேர்த்து இரண்டு தேசிய மொழிகளும் கற்பிக்கப்பட வேண்டும்.

6. முஸ்லிம் மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் வரை கற்பதற்கு இடமளிக்கும் அரபு கல்லூரிகள் உட்பட அனைத்து மத்ரஸாக்களும் அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அவை கல்வி அமைச்சினால் கண்காணிக்கப்பட வேண்டும். அந்தப் பாடசாலைகள் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்கப் பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதோடு, ஆசிரியர்கள் அரசாங்கப் பொறிமுறையின் மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

7. மத்ரஸாக்களின் அனைத்து மௌலவிகளும் ஆசிரியர்களும் ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

8. மத்ரஸாக்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதிப் பாய்வுகள் (Funding) கண்காணிக்கப்பட வேண்டும். ஏனைய சமய நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே சட்டக் கட்டமைப்பைப் பயன்படுத்தி இது மேற்கொள்ளப்பட வேண்டும்.

குடியேற்றம் மற்றும் ஏனையவை

1. இலங்கைக்குக் குடியேறும் வெளிநாட்டு இஸ்லாமிய நாடுகளின் அகதிகள் ஒரு முக்கிய காரணியாகக் கருதப்பட வேண்டும். குடியேற்றத் தரவுகளைச் சேகரிப்பதற்கும் அவற்றை நவீன முறையில் பகுப்பாய்வு செய்வதற்கும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

2. நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் நிகழும் புலம்பெயர்வு மற்றும் பணப்பரிமாற்றங்களைக் கண்காணிக்க முறையான கட்டமைப்புகள் பின்பற்றப்பட வேண்டும்.

3. தேசிய குடியேற்ற மற்றும் குடிவரவு கொள்கைகள் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

தேர்தல் முறைமை

1. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட ஒரு நிலையான அரசாங்கம் அவசியம். பலவீனமான அரசாங்கம் இருப்பதால் இலங்கையைத் தாக்க முடியும் என்று சஹாரனின் குழு கருதியதாக ஆணைக்குழுவின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எந்தவொரு பொதுத்தேர்தலிலும் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக்கூடிய தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும். அதேவேளை சிறுபான்மை குழுக்களுக்கும் முறையான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கச் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளவாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Recent Articles

Back to top button