காஸா மீதான முற்றுகையை உடைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சியான Global Sumud Flotilla வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இணைந்துகொள்ள சமீரா மெஹ்பூப்தீன் நாட்டிலிருந்து புறப்பட்டார்

காஸா மீதான முற்றுகையை உடைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சியான “Global Sumud Flotilla – Spring Mission for Gaza 2026” இல் இணைந்துகொள்வதற்காக, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சமீரா மெஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு முதன்முதலில் பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் அணிவகுப்பு, சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆர்வலர்களை ஒன்றிணைக்கிறது. இஸ்ரேலியப் படைகளால் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை மீறி, கஸா பகுதிக்கு அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
மெஹ்பூப்தீனின் இந்த பங்களிப்பு குறித்து, திங்கட்கிழமை (20) இலங்கை பாலஸ்தீன தூதரகத்தில் “சுதந்திர பாலஸ்தீன அமைப்பு” (Free Palestine Organization) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போது விளக்கமளிக்கப்பட்டது. பாலஸ்தீனப் போராட்டத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், மெஹ்பூப்தீனின் துணிச்சலான பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.
கட்டுப்பாடுகளுக்கு சவால் விடுத்து, ஆபத்துகளுக்கு மத்தியில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் இந்த Global Sumud Flotilla, சர்வதேச ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக கருத்துத் தெரிவிக்கையில், “சுதந்திர பாலஸ்தீனத்திற்கான போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம். சகோதரி சமீரா மெஹ்பூப்தீனுக்கு பலமும், தைரியமும் கிடைக்க வேண்டுமெனவும், அவர் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டுமெனவும் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்தார்.



