News

நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்திய பணம் இடையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.. ஹேக்கர்கள் தலைமறைவாகிவிடுவார்கள் என்பதால் தான் முன்னரே வெளிப்படுத்தவில்லை.. – திறைசேரி செயலாளர்

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து தகவல் கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார். திறைசேரியில் இடம்பெற்ற இந்த நிதி முறைகேடு குறித்து விளக்கமளிப்பதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட கடன் தொகையின் தவணையை அரசாங்கம் செலுத்திய போது, இடையில் புகுந்த ஹேக்கர்கள் (Hackers) அந்தப் பணத்தைத் திசைதிருப்பித் திருடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மோசடி குறித்து ஆரம்பத்திலேயே பகிரங்கப்படுத்தாமைக்கான காரணத்தையும் செயலாளர் விளக்கினார். விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் தகவல்கள் கசிந்தால், இதில் தொடர்புடையவர்கள் தப்பிச் செல்லவோ அல்லது சாட்சிகளை அழிக்கவோ வாய்ப்பு இருந்ததாலேயே விசாரணைகளின் இரகசியத்தன்மையைப் பாதுகாத்ததாக அவர் கூறினார்.

“ஹேக்கர்கள் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டாலர்களைத் திருடிய சம்பவத்தை நாங்கள் மறைத்ததற்குக் காரணம், அது குறித்த தகவல்கள் வெளியே தெரிந்தால் ஹேக்கர்கள் தலைமறைவாகவோ அல்லது தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்து தப்பிச் செல்லவோ கூடும் என்பதால் தான்.”

செயலாளர் குறிப்பிடுகின்றபடி, ஆஸ்திரேலியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொடுப்பனவின் போதே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. சைபர் குற்றவாளிகள் மின்னஞ்சல் செய்திகளுக்குத் தடையை ஏற்படுத்தி, தரவுகளை மாற்றி, அரசாங்கம் செலுத்திய பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கச் செய்துள்ளனர்.

2026 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) முறைமைக்குள் சைபர் குற்றவாளிகள் நுழைய முயற்சிப்பதை முதலில் கண்டறிந்ததாக அவர் கூறினார். இது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை அமைப்பு (SL-CERT) மற்றும் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உடனடியாக அறிவித்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆழமான விசாரணைகளில், இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னரே சைபர் தாக்குதல்தாரிகள் முறைமைக்குள் நுழைந்து இந்த நிதி மோசடியைச் செய்துள்ளமை தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து நிதி அமைச்சினால் இரண்டு பிரதித் திறைசேரி செயலாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், கடமையைச் சரியாகச் செய்யத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இது குறித்து ஆஸ்திரேலிய தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட கடன் வழங்கிய தரப்பினருக்கு ராஜதந்திர மட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவும் (FIU) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட சர்வதேச குற்றச் சதி என சந்தேகிக்கப்படுவதால், வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக ஹர்ஷண சூரியப்பெரும வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button