News

திறைசேரியில் மோசடி ஒன்று நடந்துள்ளது .. ஆனால் நாம் திருடர்கள் அல்ல.. – பிரதி அமைச்சர்

நிதியமைச்சின் இணையத்தளத்திற்குள் ஊடுருவி (Hacking) மேற்கொள்ளப்பட்ட மோசடி நடவடிக்கை குறித்து அரசாங்கம் தகவல்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இது எவ்விதத்திலும் அரசாங்கத்தின் தூண்டுதலால் இடம்பெற்ற ஒன்றல்ல எனவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் பெற்ற ஊழல் அனுபவங்களைக் கொண்டு, தற்போதைய திசைகாட்டி (மாலிம) அரசாங்கத்தை அளவிட முயற்சிக்க வேண்டாம் என அவர் எதிர்க்கட்சிக்கு கடும் சவால் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், விடயம் தெரிந்தவுடன் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உதய கம்மன்பில மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், கடந்த கால அனுபவங்களை வைத்து தற்போதைய அரசாங்கத்தையும் மோசடிக்காரர்களாக முத்திரை குத்த அவர்கள் முயல்வதாகக் குறிப்பிட்டார்.

“தாங்கள் மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என்பதால் இந்த அரசாங்கமும் அப்படித்தான் இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். உங்கள் அளவுகோலால் எங்களை அளவிட வேண்டாம் என அவர்களுக்குக் கூறிக்கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் அரசியல் தலையீடுகள் இருந்தமைக்கு சான்றுகள் உள்ள போதிலும், தற்போதைய அரசாங்கம் அத்தகைய எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நிலக்கரி மோசடி போன்ற ஊழல்கள் குறித்து விசேட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

அரசாங்கத்தின் மீது சேறு பூசும் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், திசைகாட்டி அரசாங்கம் ஊழலுக்கு இடமளிக்காது எனவும், மோசடிகள் நடந்திருப்பின் அவற்றை நிரூபிக்குமாறும் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்தார்.

Recent Articles

Back to top button