எனக்கு Prostate புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது உண்மை – வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்து இப்போது நான் நன்றாக உள்ளேன் ; பெஞ்சமின் நெதன்யாஹு

தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) இருப்பது கண்டறியப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
யுத்தம் தீவிரமாக இருந்த தருணத்தில் அதன் வெளியீட்டைத் தவிர்ப்பதற்காக, தனது வேண்டுகோளுக்கு இணங்க தனது வருடாந்த மருத்துவ அறிக்கை இரண்டு மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டதாக நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஈரான் மூலமாக முன்னெடுக்கப்படும் “பொய்யான பிரச்சாரங்களை” தடுப்பதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
“எனது புரோஸ்டேட்டில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்சினை இருந்தது, அது முழுமையாக குணப்படுத்தப்பட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்டது,” என்று கூறிய அவர், தான் இப்போது “சிறந்த உடல் நிலையில்” இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புரோஸ்டேட் வீக்கத்திற்காக (benign prostate) தான் வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக நெதன்யாகு கூறினார். சமீபத்திய பரிசோதனையின் போது, மருத்துவர்கள் புரோஸ்டேட்டில் “ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான சிறிய இடத்தைக்” கண்டறிந்தனர்.
“பரிசோதனையில், அது ஆரம்ப கட்ட வீரியம் மிக்க கட்டியாக (malignant tumour) இருப்பது தெரியவந்தது, அது எங்கும் பரவவில்லை,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து தான் மேற்கொண்ட இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சையின் (targeted treatment) மூலம் அந்தக் கட்டி முழுமையாக அகற்றப்பட்டது என்றும், நோய்க்கான எந்த அறிகுறிகளும் தற்போது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



