News

ஹெக்கர் திருடிய பணத்தை மீட்க சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கவுள்ளது.

நிதியமைச்சின் ஊடாக சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (24) முற்பகல் கண்டி மல்வத்து மகா விகாரை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மேலும் கூறுகையில்:

“இந்த விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான சர்வதேச ஒத்துழைப்புகளும் இலங்கைக்கு கிடைத்துள்ளன. ஒரு அரசாங்கம் என்ற ரீதியில், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளோம்.”

அதேவேளை, தமக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்:

“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப் பார்க்கிறார்கள். அது பாராளுமன்றத்திற்கு வரும் வரை நான் காத்திருக்கிறேன். ஏனென்றால், அப்போதுதான் அவற்றுக்கு பதிலளிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் பல கதைகளைச் சொல்கிறார்கள். மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது மிகவும் அவசியம். அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், மாற்று அரசியல் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் முக்கியமானது. ஆனால், தற்போதுள்ள எதிர்க்கட்சி அதைத்தான் செய்கிறதா என்பதை நாமும் சிந்திக்க வேண்டும், மக்களும் சிந்திக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button