News

நமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறும். அந்தளவுக்கு எம்மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது… சிங்கள மக்களும் என்னை நம்புகின்றனர் ; ரிசாத்

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு பொதுத் தேர்தலிலே தீர்ப்பு; பொதுத்தேர்தலில் 10 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவோம்” – மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

(எம்.ஏ.ஏ.அக்தார்)

மக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் (10) நடைப்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“எமது கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரும், தவிசாளர் ஒருவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவுமே எமது கட்சி, மக்களின் ஆணையைக் கோரியது. இதனால் சஜித் பிரேமதாசவுக்கு கணிசமான வாக்குகளை எமது கட்சி பெற்றுக்கொடுத்தது.

பாராளுமன்றத்தில் நான்கு எம்.பிக்களைப் பெறுமளவுக்கு எமது கட்சிக்கு மக்களின் ஆணை கிடைத்தது. இந்த ஆணையை மீறி, இந்த எம்.பிக்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். இவர்களைப் பின்தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் கட்சி மாறிவிட்டனர்.

மக்களின் ஆணைகளை மீறிய இவர்களை மன்னிக்கவே முடியாது. எதிர்வரும் காலங்களில் இவர்களை மீண்டும் எம்முடன் இணைக்கப் போவதில்லை. இவர்கள் சென்றதால் கட்சியின் வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம். அந்தளவுக்கு மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கோட்டாவின் சகாக்களைப் பாதுகாக்கவே இவர்கள் ரணிலுடன் இணைந்துள்ளனர். கடந்தகால ஊழல்வாதிகளும் அமைச்சர்களும் தங்களைப் பாதுகாப்பதற்கே, ரணிலை வெல்லவைக்கப் பார்க்கின்றனர். சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவர்.

ரணில் விக்ரமசிங்கவும் அனுரகுமார திஸாநாயக்கவும் இரவில் இரகசியமாக பேசிக்கொள்கின்றனர். வெவ்வேறாகப் போட்டியிடுவோர் ஏன் பேச வேண்டும்? வெற்றியைத் தக்கவைப்பதற்கான வழிகளையே இவ்விருவரும் ஆராய்கின்றனர். அனுர ஆட்சிக்கு வந்தால், ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாகலாமென ரணில் நினைக்கிறார். இவை எதுவும் நடக்காது.

சிங்களப் பகுதிகளில் எந்த எதிர்ப்புக்களும் இன்றி கூட்டங்களில் பங்கேற்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் என்று எனக்கு வழக்குத் தொடுத்தனர். வாக்களிப்பதற்காக பஸ்களில் மக்களைக்கொண்டு வந்ததாகக் குற்றம் சுமத்தினர். இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து நீதிமன்றம் என்னை நிரபராதி எனத் தீர்ப்பளித்தது. இதனால்,சிங்கள மக்கள் என்னை நம்புகின்றனர்” என்று கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button