News

சுதந்திர இலங்கையின் 78 வருட வரலாற்றில் ஒருபோதும் நடக்காதவாறு முஸ்லிம்களின் மார்க்க உரிமையை அநுர குமார அரசாங்கம் திட்டமிட்டு பறித்து விட்டது.

மே மாதம் 28ஆம் திகதிக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தினம் இருக்கும் நிலையில் மே மாதம் 1ஆம் திகதிக்கு இருக்கும் வெசாக் தினத்தை மே மாதம் 30ஆம் திகதியில் இருக்கும் போயா தினத்திற்கு (அதி பொசன் தினத்திற்கு) மாற்றியதுடன் நின்று விடாமல் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை வெசக் வாரமாகவும் அரசாங்கம் பிரகடனப்படுத்தி விட்டது.

வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு விட்டால் அந்த நாட்களில் மதுபான சாலைகளை திறக்கவோ விற்பனை செய்யவோ பாவனை செய்யவோ தடை என்பது மட்டுமல்ல, மாமிசத்திற்காக பிராணிகளை பலியிடுவது மற்றும் விற்பனை செய்வது தடை ஆகும். இந்த வெசாக் வாரத்தில் கோழிக்கடை மற்றும் இறைச்சிக் கடைகள் திறப்பதே தடை செய்யப்பட்டு விடும்.

மே 27 முதல் ஜூன் 2ஆம் திகதி வரை வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டதாக 2026.04.17 திகதியிடப்பட்ட பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களினால் விஷேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். அந்த வர்த்தமானியில் 2026.03.30 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய எனவும் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. மார்ச் மாதம் 30 திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட் தீர்மானம் ஏப்ரல் 17 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அமைச்சரவை பேச்சாளர் ஏப்ரல் 22ஆம் திகதி ஊடகங்களில் அறிவிக்கின்றார். மார்ச் 30 முதல் ஏப்ரல் 22 வரையான 22 நாட்களாக முஸ்லிம்கள் முகங்கொடுக்கப் போகின்ற மார்க்க உரிமை பற்றி அரசாங்கம் சார்ந்த எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது அநுர குமார அவர்களை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு பணம் செலவு செய்த ஜனாதபதியுடன் நெருங்கிய முஸ்லிம் வர்த்தகர்களுக்கோ அல்லது மிம்பர்களில் அநுர குமாரவை ஜனாதிபதியாக்க களம் அமைத்துக் கொடுத்த உலமாக்களுக்கோ அல்லது மாலிமா மேடை ஏறிய மௌலவிகளுக்கோ ஒன்றுமே தெரியாதா? அல்லது அமைதியாக இருந்து விட்டார்களோ?

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கெபினடில் அமைச்சராக இல்லாமல் போனதும் இதற்கு ஒரு காரணமாகும். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கெபினட்டில் அங்கம் வகித்து இருந்தால் இந்த வெசக் வாரம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெறும் போது முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் 28ஆம் திகதி வர உள்ளதை சுட்டிக்காட்டி எமது இஸ்லாம் மார்க்கத்தில் ஐம் பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜுடன் தொடர்புபட்ட ஹஜ் கடமையை நிறைவேற்ற வசதி இல்லாதவர்களுக்கும் அதன் நன்மைகளை பெற்றுக்கொள்ள சாதகமான உழ்ஹிய்யா எனும் பிராணிகளை அறுத்து பலியிடுவதற்கு தேவையான தினங்கள் பற்றி சுட்டிக்காட்ட முடிந்திருக்கும், ஆனால் துரதிஷ்ட வசமாக வரலாற்றில் ஒருபோதும் இல்லாத்து போன்று அநுர குமாரவின் அரசில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கெபினட்டில் அங்கம் வகிக்கவில்லை.

அநுர குமார அவர்களை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு முஸ்லிம்கள் மார்க்கப் பணியில் வீடு வீடாக செல்வது போன்று சென்று வாக்குத் திரட்டினார்கள். ஏன் ஒரு காலமும் இல்லாதது போன்று முஸ்லிம் பெண்கள் வீதியில் இறங்கி அநுர குமாரவுக்காக வாக்கு திரட்டினார்கள். முஸ்லிம்கள் இவ்வாறு செய்தும் முஸ்லிம்களின் மார்க்க உரிமையை பரித்து விட்டார் அநுர குமாரவின் அரசாங்கம்.

கோடாபய அரசு முஸ்லிம்களின் ஜனாஸாவை எரித்ததை விடவும் இந்த அநுர அரசு உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற தடை செய்தமை பாரதூரமான விடயமாகும்.

வெசாக் வாரமாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட தினங்களில் யாராவது உழ்ஹிய்யா செய்தால் நாட்டு சட்டத்திற்கு அமைய தண்டனைக்குறிய குற்றமாகவும் அது இன ரீதியான பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. விஷேடமாக இலங்கையில் சகல பிரதேசங்களிலும் பள்ளிவாசல்களில் கூட்டுக் குர்பான் நடைறுகின்றது. நாட்டு சட்டத்தை மதிக்காமல் முஸ்லிம் பள்ளிவாசல்களில் மாடுகளை பலியிட்டு விட்டதான செய்திகள் வந்து நாட்டில் மீண்டும் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய முஸ்லிம் பிரமுகர்களினதும் ஜம்மியதுல் உலமாவினதும் கடமையாகும். எனவே இலங்கை முஸ்லிம்களுக்கு இம்முறை ஹஜ்ஜுப் பெருநாளைக்கு உழ்ஹிய்யா கடமையை வழமைபோல நிறைவேற்ற வாய்ப்பை எடுத்துத் தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எச்.எம். ஹுனைப்
பேருவளை பிரதேச சபை உறுப்பினர்.

Recent Articles

Back to top button