News

“எமது அரசாங்கம் உங்களது வரிப்பணத்தை உங்களுக்காகவே செலவிடுகிறது” – நீதி அமைச்சர்

“சொந்தமாக ஓரிடம் – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் “தேசிய வீடமைப்புத் திட்டம் – 2026” திட்டத்திற்கு இணையாக, மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 13 குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நீதிக் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கவின் தலைமையில் மொரட்டுவை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 13,347 வீடுகள் கட்டப்படவுள்ளதோடு, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழும் மேலதிக வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். வறுமையை ஒழிப்பது என்பது குடிசைகளை அகற்றி எறிவதல்ல. மக்களின் பொருளாதார வறுமையிலிருந்து அவர்களை மேலே கொண்டு வர வேண்டும் என்பதும், முழுமையடையாவிட்டாலும் தற்போதைய நிலையிலிருந்து ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்பதுமே எமது அரச கொள்கையாகும். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் 2048 வரை எதையும் வழங்க முடியாது என்றும், ‘தொங்கு பாலத்தில்’ தான் செல்ல வேண்டும் என்றும் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏன் அப்படிச் சொன்னார்கள்? அக்காலத்தில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செலவுகளைப் பராமரித்துக் கொண்டு அவர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

நாங்கள் வந்த பிறகு, இந்த பொருளாதாரத்தை முழுமையாகக் கட்டியெழுப்பி வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்லாமல், ‘தித்வா’ சூறாவளி வந்த நேரத்தில் அந்த வீடுகளுக்கு 25,000 ரூபா, 50,000 ரூபா மற்றும் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை பண உதவிகளை வழங்கினோம். அரசாங்கத்திடம் உள்ள பணம் நானோ எமது நகரசபைத் தலைவரோ வீட்டிலிருந்து கொண்டு வந்த தனிப்பட்ட பணம் அல்ல. அரசாங்க அதிகாரிகளின் பணமும் அல்ல. மொரட்டுவை மக்களிடம் இருந்தே நாம் வரிகளைச் சேகரிக்கிறோம். அது முட்டையாக இருக்கலாம் அல்லது ஒரு கடையாக இருக்கலாம், மக்களிடமிருந்து வரி வசூலிக்கிறோம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட வரிப்பணம் மீண்டும் மொரட்டுவை மக்களின் கைகளுக்கே செல்ல வேண்டும். வேறு யாருடைய பைகளுக்கும் அல்ல.

கடந்த ஆண்டு 11 வீடுகளை இது போன்று அபிவிருத்தி செய்தோம், அந்த மக்களும் அதில் பங்களித்து வீடுகளை அமைத்து தற்பொழுது முன்னேறியுள்ளனர். மக்கள் ஏழையாவது தெய்வ சாபத்தினாலோ அல்லது கர்மவினையாலோ அல்ல. சமூகத்தில் முறையான தேவைகள் பூர்த்தி செய்யப்படாததே இதற்குக் காரணம். எவரும் நியாயமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கும், ஒரு குடும்பமாக ஒரு வீட்டில் சந்தோஷமாக இருப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் கொள்கை. அதன் அடிப்படையில்தான் உங்கள் வரிப்பணம் உங்களுக்காகவே செலவிடப்பட்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் அதிக பணம் வைத்திருப்பதால் இதனைச் செய்யவில்லை, கஷ்டங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் செய்கிறோம். எனவே நீங்களும் இதில் பங்கெடுத்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உழைப்பைப் பெற்று இந்த வேலையைச் செய்யுங்கள். இல்லையெனில் இந்த 10 இலட்சம் ரூபா போதுமானதாக இருக்காது. ஆகவே நீங்களும் முன்வந்து உங்கள் இடத்தை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மொரட்டுவை மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

இந்நிகழ்வில் மொரட்டுவை நகரசபைத் தலைவர் நிஷாந்த பெர்னாண்டோ, மொரட்டுவை பிரதேச செயலக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பொறியாளர் ஜி.எம்.எஸ். நிஷாந்த, பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பயனாளிக் குடும்பங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recent Articles

Back to top button