News

அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதது முஸ்லிம் சமூகத்திற்கு அல்ல… மாறாக இது அநுர அரசிற்கு தான் குறைபாடு

உழ்ஹிய்யா கடமையுடன் கூடிய ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் உள்ளடங்களாக வைசாக பெளர்ணமி வாரத்தை அமைச்சரவை காலம் தாழ்த்தி பிரகடனம் செய்த போது முஸ்லிம்களது அபிலாஷைகளை மனக்குறைகளை சுட்டிக்காட்ட (உதவி இல்லாவிட்டாலும் உபத்திரம் இல்லாதிருக்க) அங்கு ஒரு முஸ்லிம் அமைச்சர் இருக்க வில்லையே என்று இன்று பலரும் ஆதங்கம் தெரிவிப்பதனை நாம் பார்க்கிறோம்.



நாட்டில் இனப்பிரச்சினை வன்முறையாக உள்நாட்டு யுத்தமாக வெடித்து இரத்த ஆற்றை ஓட்டிய காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரான இலங்கையிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களால் அல்லது அமைச்சர்களால் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை மனக்குறைகளை அந்தந்த மட்டங்களில் முறையாக பிரதிநித்துவம் செய்ய முடியாமல் போனமையாலும்..

தேசிய அளவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி  முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச அரசியலில் பாரிய தாக்கத்தை கொண்டிராததாலும், பாரம்பரிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்ததாலும் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாமை பற்றிய மனக்குறையை பெரிதாக முஸ்லிம் சமூகம் வெளிப்படுத்திக் கொள்ள வில்லை எனலாம்.

ஆனால், போருக்கு பின்னரான இலங்கையில் முஸ்லிம்கள் எதிர் கொண்ட தொடரந்தேர்ச்சியான சவால்களின் பின்புலத்தில் நாடாளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியிற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து கணிசமான ஆதரவு தரப்பட்டமை மறுக்கவோ மறைக்கவோ முடியாத பேருண்மையுமாகும்.

கடந்த கால மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரங்களை, கொள்கைகளை அரசியல் செயற்பாடுகளை மறந்து, தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் பல முஸ்லிம் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், புதிய தலைமுறை அரசியல் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்புக்களும் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத் தக்கதாகும்.

என்றாலும், வேட்புமணு தாக்கல் செய்யப்பட்டது முதலே முஸ்லிம் சமூகத்தில் இருந்து உயர் பதவிகளை அலங்கரிக்க போதுமான அறிவு ஆற்றலும் தகைமைகளும் உள்ள ஆளுமைகள் பத்தரமுல்லை தலைமையகத்தால் உள்வாங்கப்படாமை பற்றிய ஆதங்கம் இருந்து வந்ததனை உள்ளக முஸ்லிம் ஆதரவுத் தளம் அறிந்திருந்தது.

என்றாலும், தேசிய அரசியலில் சகலருக்கும் பொதுவான புரட்சிகரமான முறைமை மாற்றங்கள் ஏற்பட வேண்டும், இனமத பாகுபாடுகள் ஒழிய வேண்டும், நாட்டு அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பில் புற்று நோயாக புரையோடிப் போயுள்ள ஊழல் மோசடி வங்குரோத்து அரசியல் கலாசார ஒழிய வேண்டும், பல் துறைகளிலும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என முஸ்லிம்களும் புரிந்துணர்வுடன் தமது நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்தனர், இன்றும் இருக்கின்றனர்.

அதேவேளை, ஒரிரு முஸ்லிம் அமைச்சர்கள் இருக்க அவர்கள் மீது இனமதவெறி சக்திகள், அவர்களை தமது நிகழ்ச்சி நிரல்களுக்காக நகர்த்தும் பிராந்திய சர்வதேச சதிகார சக்திகள் குறிவைத்திருக்கும் நிலையில் சமூகத்தின் அபிலாஷைகளை மனக்குறைகளை பிரதிநிதித்துவம் செய்வதனை விட வேறேதும் பொருத்தமான பொறிமுறை ஒன்றை கண்டறிதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் நாம் இருந்தமையும், இன்னும் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், யுத்தம் இடம் பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரான இலங்கையிலும்  இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய மறைகரங்கள் அவற்றின் உள்நாட்டு முகவர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கூலிப்படைகள் நாட்டின் உயர் மட்டங்கள் முதல் அடிமட்டங்கள் வரை தற்போதும் நிழல் அரசாக (பாதாள அரசாக) ஆதிக்கம் செலுத்துகின்றனவா என்ற நியாயமான சந்தேகமும் எம்மிடம் இல்லாமல் இல்லை.

உலகலாவிய முஸ்லிம் உம்மத்தின் அங்கமாக சர்வதேச இஸ்லாமோபீதி நிகழ்ச்சி நிரல்கள் அதன் வழி வரும் நெருக்குவாரங்கள், அநீதிகள், பாகுபாடுகள் எமக்கு பரீட்சயமற்ற புதிய விடயங்களும் அல்ல, அவை எமக்கு மத்தியில் எந்த வகையிலும் ஒரு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்ததும் இல்லை.

அதிகார வர்க்கங்களின் அரசியலுக்கு அப்பால் நாம் சமாதான சகவாழ்வையும் மதங்கள் தாண்டிய மனிதாபிமானத்தையும் நாம் அதிகம் நேசிப்பதால் எமக்கு தேசிய நலன்களிற்கான முன்னுரிமைகளை சரியாக எடை போட்டுக் கொண்டு சகிப்புத் தன்மையுடன் முன்செல்ல முடிகிறது.

எது எப்படிப் போனாலும் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வுகள் எய்தப்படாத வரையிலும், அதில் முஸ்லிம் பரிமாணங்கள் கவனமாக உள்வாங்கப்படாத வரையிலும் எந்த சாத்தான், எந்த வேடத்தில் வேதம் ஓதினாலும் வரலாறு மீண்டும் மீண்டும் திருப்பி திருப்பி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதுவே உண்மை!

தேசிய மக்கள் சக்தி அரசு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் முதல் இன்றுவரை அது முன்னெடுத்துச் செல்லும் பாரிய பல்துறை சீர்திருத்த திட்டங்கள் அமுலாக்கங்களுக்கு அறிவுபூர்வமான ஆதரவை வழங்கி வரும் நாம் அமைச்சரவையில் நியாயமான முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதனையும், அதனால் முஸ்லிம் சமூகம் இழப்பதற்கு எதுவும் இல்லா விட்டாலும் அது இந்த அரசிற்கு ஒரு பெரிய வடுவாகவே வரலாற்றில் பதியப்படும்; பட்டிருக்கிறது என்பதனையும், அதற்காக காலம் கடந்து கைசேதப்படுவார்கள் என்பதனையும் வலியுறுத்தி கூறி  வைக்கிறோம்!

ஒரு சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை மறுப்பதற்கு மட்டும் இங்கு இனவாதத்திற்கு இல்லை என்று நியாயம் கூறுவது, அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் அறிவும் ஆற்றலும் தகைமையும் உள்ளவர்கள் இல்லை என்று வரட்டுத் தர்க்கம் புரிவதும் அறிவுபூர்வமான ஆரோக்கியமான அரசியல் ஆகாது!

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 27.04.2026 || SHARE

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button