News

திடீர் திடீர் என்று  பணம் திருட்டுப் போக ஆரம்பித்துள்ளது ஏன்? பின்னணியில் என்ன நடக்கிறது? தரவுகளுடன் ஒரு விளக்கம்

✍️ ஸபர் அஹ்மட்

அவுஸ்ரேலியாவுக்கு செலுத்த இருந்த  2.5 மில்லியன் டொலர் (80 கோடி) கடன் தவணை ஒன்று மாயமானது.இதற்கு ஆரம்பத்தில் ஹெக்கர்கள் தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும் இந்த பணப் பரிவர்த்தனைச் சொதப்பலோடு சம்பந்தப்பட்ட  நிதியமைச்சின் மூத்த அதிகாரிகள் ஐந்து பேரின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டு வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

இதேவேளை HSBC வங்கி இந்தப் பணப் பரிவர்த்தனையைச் செய்ய வேண்டாம் என்று இரண்டு தடவை எச்சரிக்கை விடுத்த போதிலும் அதுபற்றிக் கவனத்தில் கொள்ளாது பணப் பரிவர்த்தனை நடந்ததும் அம்பலமாகி இருக்கிறது.

இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்தப் பகல் கொள்ளை தொடர்பாக சீ ஐ டி ஒரு அறிக்கை வழங்கி இருக்கிறது.

‘’ இலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சைபர் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் N-able (அல்லது Enable) என்ற நிறுவனம், 2025 அக்டோபர் மாதத்தில் திறைசேறிக்கு ஒரு சிறப்பு எச்சரிக்கையை விடுத்திருந்ததாகவும் அதில் ஆஸ்திரேலிய அரசின் உத்தியோகபூர்வ டொமைன் பெயரான gov.au-க்குப் பதிலாக, gov.au.com என்ற போலி டொமைன் மூலம் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் வருகின்றன என்றும் இதுபற்றி அவதானமாக இருக்குமாறும் தெரிவித்து இருக்கிறது.

இந்த எச்சரிக்கைக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர் தான் திறைசேறி  2026 ஜனவரியில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. இதன்மூலம் இந்தப் பரிவர்த்தனையில்  மோசடியான நோக்கம் அல்லது கடுமையான அலட்சியமே இருப்பது புலனாகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மற்றொரு திடுக்கிடும் விவகாரத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது சி ஐ டி

அதாவது மத்திய வங்கியின் ERD எனப்படும் external Resources department இல்  இருந்த இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான முக்கியமான தரவுகளும் மின்னஞ்சல் பதிவுகளும் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் இது விசாரணைகளைத் தடுப்பதற்காகவும் ‘டிஜிட்டல் சான்றுகளை’ (Audit Trails) அழிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட செயலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.

இப்போது US போஸ்டிற்கு அனுப்பிய ஆறு லட்சம் டொலர் அதாவது  இருபது கோடி ரூபாயைப் பறிகொடுத்து நிற்பதாகவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

பிரான்ஸிற்கு செலுத்த இருந்த கடன் பத்திரங்கள் சம்பந்தமான டாக்குமெண்ட் ஒன்றும்  மாயமாகி இருக்கிறதாம்.

இதெல்லாம் அனுபவக் குறைவால் வந்த வினைகள் என்று சொல்வோர் இருக்கிறார்கள். உண்மையில் இந்தப் பெரும் பெரும் பணப் பரிவர்த்தனைகள் எல்லாம் தகுதிகாண் காலம் எனப்படும் probation period இல் இருக்கும் பயிற்சியாளர்களோ ஜுனியர்களோ செய்வதில்லை. பழுத்த அனுபவமுடைய அதிகாரிகள்தான் செய்கிறார்கள்.

ஆட்சிகள் மாறுகின்றன. கடந்த ஏழு வருடங்களில் நான்கு ஜனாதிபதிகள் வந்துவிட்டார்கள். ஆனால் அதே  சீனியர் அதிகாரிகள்தான் இந்தப் பணப் பரிவர்த்தனைகளை , நிதியோடு தொடர்புடைய சகலதையும் கையாள்கிறார்கள்.

இதெல்லாம் முழுக்க முழுக்க அதிகாரிகளின் அசமந்தத்தால் மட்டுமே நடந்ததா இதற்கு வேறு யாரும் உடந்தையா என்பதை விசாரணைகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கடன் தவணைகளைக் கட்ட முடியாததால் தான் நாம் வங்குரோத்து அடைந்துவிட்டோம் என்று கூறிக் கொண்டு  IMF இடம் கையேந்தினோம். இப்போது நடப்பதும் அது போல ஒன்றுதான். பணம் கட்டப்படுகிறது. ஆனால் உரிய தரப்புக்குப் போய்ச்  சேர்வதில்லை. பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு கடன் கட்டாமல் இருப்பதும் ஒன்றுதான்.அலட்சியத்தால் இப்படி ஆகுவதும் ஒன்றுதான்

இந்த ட்ரெண்ட் இந்த ஜனவரியில் இருந்துதான் ஆரம்பமாகி இருக்கிறது. திடீர் என்று  பணம் திருட்டுப் போக ஆரம்பித்து இருக்கிறது.

இன்னும் என்ன என்ன அதிசயங்களைக் கேட்க வேண்டி வருமோ என்றுதான் தெரியவில்லை.

இதன் பின்னணியில் நாட்டை முடக்கப் பாதாள அரசு எனப்படும் deep state சதி நடக்கிறது என்று பொத்தாம் பொதுவாய்ச் சொல்லப்படுகிறது.

அதில் உண்மை இருக்கிறது .ஈஸ்டர் உட்பட விசாரணைகள் முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஆனால் எத்தனை காலத்திற்கு இதையே சொல்வது

இத்தனை பெரும் அதிகாரத்தை மக்கள் வழங்கியதே அத்தனை களைகளையும் பிடுங்கி எறியத்தானே ஒழிய மூக்குச் சிந்தி அழுவதற்கு அல்ல என்று இவர்களுக்குப் புரியவில்லை.

ஆட்சி நடத்துவது என்பது சவால்தான். சவால்களை,கூச்சல் குழப்பங்களைச் சமாளிக்கத் தெரிய வேண்டும். பணத்திருட்டு என்பது  ஒரு சதி என்றே வைப்போமே. அப்படி என்றால் இத்தனை பெரிய அதிகாரத்தை யாரைத் தாலாட்டுவதற்குப் பெற்றீர்கள் என்றுதான் மக்கள் தூற்றத் தொடங்குவார்கள்.

நளிந்த ஜயதிஸ்ஸ ‘ வேண்டுமென்றால் இன்னொன்று சொல்கிறேன்’ என்றவாறு தான் தபால் திணைக்களம் இழந்த ஆறு லட்சம் டொலர் பற்றிச் சொல்கிறார்.அப்படி என்றால் இன்னும் இதுபோன்ற இழப்புக்கள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஊழல்மிகுந்த நாட்டிற்கு மட்டுமல்ல தம் திறைசேறியை முறையாக நிர்வகிக்கத் தெரியாத பொறுப்பற்ற நாட்டிற்கும் முதலீட்டாளர்கள் வரப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டால் சரி.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button