மகிந்த ராஜபக்ஷவிற்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து கடும் அறிவித்தல் அனுப்பப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சொத்து மற்றும் பொறுப்பு விபர அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு சத்தியக்கடதாசி மூலம் நீண்ட கால அவகாசம் கோரியிருந்த போதிலும், அத்தகைய கால அவகாசத்தை வழங்க முடியாது என இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு அறிவித்துள்ளது.
இரண்டு வார காலத்திற்குள் சொத்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொத்து மற்றும் பொறுப்பு விபர அறிக்கையை சத்தியக்கடதாசி ஊடாக கடந்த 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த அறிவித்தலுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ஊடாக கடந்த 9ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி ஒன்றை கையளித்து கோரிக்கையொன்றை விடுத்திருந்தார். சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதால், அதற்காக கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு அதில் கோரப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி ஊடாக முன்வைத்த இந்த கோரிக்கை குறித்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
மகிந்த ராஜபக்ஷவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த சத்தியக்கடதாசி கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.



