இலங்கைக்கு மாத்திரம் அல்ல… இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி மோசடிகளை மேற்கொண்டனர் ; லக்மாலி ஹேமச்சந்திர M P

திறைசேரி தொடர்பான நிதிப் பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் உரித்தானது அல்ல என்றும், கடந்த ஆண்டு இங்கிலாந்து சுங்க அலுவலகம் மற்றும் ஆஸ்திரேலியாவும் இவ்வாறான கட்டமைப்பு ரீதியான ஊடுருவல்கள் அல்லது மோசடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், கடன் மேலாண்மை அலுவலகம் மற்றும் மத்திய வங்கி ஆகியவை தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் செயல்முறையின் போது, மூன்றாம் தரப்பினரால் அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சலுக்கு அமைய கொடுப்பனவு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
“இது கட்டமைப்பில் உள்ள பலவீனத்தால் ஏற்பட்டதா அல்லது நிறுவனத்திற்குள் இருப்பவர்களின் தொடர்பினால் (Inside Job) செய்யப்பட்டதா என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து சுங்க அலுவலகமும் கடந்த ஆண்டு இவ்வாறான போலி மின்னஞ்சல்கள் மூலமான மோசடியில் சிக்கியது. ஆஸ்திரேலியாவிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே இது இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல”
இந்த மோசடிக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நிதியமைச்சின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த செயல்முறையுடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகளின் சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
அரசு அதிகாரி ஒருவரால் தவறு இழைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனங்களில் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.



