News

போதைப்பொருளுடன் சிக்கிய பெளத்த தேரர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில்..

தாய்லாந்தில் இருந்து குஷ் மற்றும் ஹேஷ் வகை போதைப்பொருள் 112 கிலோகிராம் கொண்டுவந்தபோது கைது செய்யப்பட்ட 22 துறவிகள் மற்றும் அவர்களை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் அகுணுகொல அமிதானந்த என்ற துறவி உள்ளிட்டோர்  (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

(02) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கைது செய்யப்பட்ட துறவிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு வந்திருந்த லக்கேகல என்று தங்களை அறிமுகப்படுத்திய துறவி ஒருவர், 

ஊடகவியலாளர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதுடன், நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு தொலைபேசியில் அழைத்து அவரை வரவழைத்து ஊடகவியலாளர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளார்.


இதன்போது, ஊடகவியலாளர்கள் நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு நிலைமையை தெளிவுபடுத்தியதன் பின்னர், உண்மையைப் புரிந்து கொண்ட தலைமையக பொலிஸ் பரிசோதகர், ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


இருப்பினும், பல்வேறு உயர் பொலிஸ் அதிகாரிகளை அழைத்த லக்கேகல என்று தம்மை அறிமுகப்படுத்திய துறவி, 23 சந்தேகத்திற்குரிய துறவிகளையும் சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகளை வீடியோ எடுப்பதைத் தடுப்பதற்கு கடும் முயற்சி செய்துள்ளார்.


வழக்கு நடவடிக்கைகள் முடிவடையும் போது இரவு 7.00 மணி ஆகியிருந்ததாகவும், நிலவிய இருள் காரணமாக நீதிமன்றத்திற்குள் செல்லும் படிக்கட்டுக்கு அருகில் பெரிய ஃப்ளாஷ் லைட் ஒன்று மட்டுமே எரியூட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த  நீதிமன்ற செய்தியாளர், அந்த சந்தர்ப்பத்தில் லக்கேகல எனப்படும் துறவியுடன் அங்கு வந்திருந்த மற்றொரு துறவி, தனது கசாயம் (சீவரம்) ஒன்றைக் கொண்டு அந்த மின்சார விளக்கை மறைக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.


சந்தேகத்திற்குரிய துறவிகளை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லும் முறையை ஊடகவியலாளர்கள் வீடியோ எடுக்க முடியாதவாறு இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லும் வரையில் ஊடகவியலாளர்களை அப்புறப்படுத்த லக்கேகல எனப்படும் துறவி முயற்சித்ததுடன், ஊடகவியலாளர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.


அப்பாவி துறவிகள் சிலர் வேண்டுமென்றே இந்த சம்பவத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடைகளை (சீவரங்களை) கழற்றுவதற்கு அரசாங்கம் சதி செய்வதாகவும் லக்கேகல எனப்படும் துறவி அங்கு தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், நீதிமன்றத்தின் மாண்பைப் பாதுகாத்து செய்திகளைச் சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், லக்கேகல எனப்படும் துறவிக்கு எதிராக நீதிமன்றப் பதிவாளரிடம் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button