இன்று காலை தோட்ட அதிகாரியின் வீட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களைக் கொள்ளையிட்டு அங்கிருந்த கெப் வண்டியிலேயே தப்பிச்சென்ற கொள்ளையர்கள் #மலையகம்

புஸ்ஸல்லாவ பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான கொஸ்கம, சாலாவ தோட்டத்தில் இன்று (08) அதிகாலை புகுந்த 6 பேர் கொண்ட ஆயுதக்குழுவினர், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை துப்பாக்கிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் தோட்டத்திற்குள் புகுந்த 6 பேர், அங்கிருந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர்.
தோட்ட அதிகாரியின் வீட்டின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி, அவர்கள் அனைவரையும் கட்டிப்போட்ட பின்னரே இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பின்வரும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன:
04 மடிக்கணினிகள் (Laptops) சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க மாலை, மோதிரம் மற்றும் தங்கக் பிஸ்கட், 02 கைத்தொலைபேசிகள்.தோட்ட அதிகாரிக்குச் சொந்தமான மிட்சுபிஷி (Mitsubishi) ரக கெப் (Cab) வாகனம் ஆகியனவே கொள்ளையிடப்பட்டுள்ளன.
கொள்ளையிட்ட பொருட்களுடன், வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த தோட்ட அதிகாரியின் கெப் வாகனத்திலேயே சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


