பேசாவிசாவிநியோகம்தொடர்பானகுற்றச்சாட்டுக்களுக்குஹஜ்குழுவின்பதில்
பேசா விசா விநியோகம் தொடர்பாக தற்போது ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு அரச ஹஜ் குழு இன்று (10) ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக அரச ஹஜ் குழுவின் தலைவரான றியாஸ் மிஹுலார் விசேட ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பேசா விசா (Free Movement Visa) சவூதி அரேபிய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படுகிறது, இது எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் சொந்தமானதல்ல.
அதன்படி, ஹஜ் பணியில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கே இந்த விசா முக்கியமானதாகும்.
இதற்கமைய, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் (வெளிப்படையான செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்), பிரதி அமைச்சர் மற்றும் ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் அடங்கிய உத்தியோகபூர்வ இலங்கை ஹஜ் தூதுக்குழுவினருக்கு இந்த விசா பங்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இதனையடுத்து மீதமுள்ள பேசா விசாக்கள், முனஸ்ஸம்கள் என்று அழைக்கப்படும் முகவர்களின் குழுத் தலைவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இந்த வருடம் இலங்கையில் ஆறு முனஸ்ஸம்கள் செயற்படுகின்றமையினால் அவர்களுக்கு 18 பேசா விசாக்கள் வழங்கப்பட்டன. இதுவே மிகப்பெரிய ஒற்றைப் பிரிவாகும்.
இதற்கு மேலதிகமாக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை மற்றும் பிங்தங்கியநபர் சிபாரிசு ஆகிய இரண்டு பிரிவின் கீழ் ஒரு சிறிய தொகையினருக்கும் இந்த பேசா விசா பகிர்ந்தளிக்கப்பட்டது.
முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் சொந்த செலவில் வாழ்கைத் துணைவிகளுக்கு வழங்கல் என்பது அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையாகும்.
பேசா விசாக்கள் முகவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஹஜ் குழு உறுதியளித்ததாக அனைத்து சமூக மற்றும் பிற ஊடகங்களிலும் தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கூற்று முற்றிலும் தவறானதாகும்.
கடந்த 2025 அல்லது 2026ஆம் ஆகிய ஆண்டுகளில் செயற்பட்ட ஹஜ் குழுவினால் இத்தகைய வாக்குறுதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை.
நாங்கள் கூறியதும் தற்போது எங்கள் கொள்கையாக இருப்பதும் என்னவென்றால், முனஸ்ஸிம்களுக்கு பேசா விசா ஒதுக்கப்படும் என்பதுதான்.
ஆனால், அவர்கள் மட்டுமே பிரத்தியேகமாக அனைத்து பேசா விசாக்களை பெறுவார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. இது ஒரு முக்கியமான வேறுபாடாகும்.
முன்னர், இலங்கைக்கு சுமார் 150 பேசா விசாக்கள் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டண அடிப்படையிலோ சவூதியினால் ஒதுக்கப்பட்டு வந்தன.
எனினும், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 100 ஹாஜிகளுக்கு ஒரு பேசா விசா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம் இலங்கைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 3,500 ஹாஜிகளுக்கு 35 பேசா விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அதேவேளை, கடந்த 2025ஆம் ஆண்டு முதல் இந்த பேசா விசாக்கள் இலவசமாக வழங்கப்படவில்லை.
ஒரு பேசா விசாவின் மொத்தச் செலவு இப்போது சுமார் எட்டு இலட்சம் ரூபாவாகின்றது.
இது மினா மற்றும் அரபா ஆகியவற்றில் வழங்கப்படும் வசதிகளுக்கான செலவை மட்டுமே உள்ளடக்கியதாகும்.
பேசா விசா வைத்திருப்பவர்கள், விமான பயணச்சீட்டுக் கட்டணம் (சுமார் நான்கு இலட்சம் ரூபா), மக்கா மற்றும் மதீனாவில் தங்குமிட வசதி, உள்ளூர் போக்குவரத்துச் செலவு போன்ற செலவுகளையும் அவர்களே மேற்கொள்ள வேண்டும்.
மனைவிமார்கள் ஏன் இணைக்கப்பட்டனர்? – இது ஒரு கொள்கையே தவிர சிறப்புரிமை அல்ல
ஹஜ் குழுவின் தலைவரின் மனைவியும் மற்றொரு ஹஜ் குழு உறுப்பினரின் மனைவியும் ஹஜ் செய்ய விருப்பம் தெரிவித்தபோது, ஹஜ் குழு ஒரு தர்மசங்கடத்தை எதிர்கொண்டது.
குறித்த இருவரும் ஏதேனும் ஒரு ஹஜ் முகவரிடம் பதிவு செய்தால், அந்த ஏற்பாட்டாளர் சலுகைகளுக்கு ஈடாக சிறப்புத் தள்ளுபடிகளை வழங்க முடியும் என்ற குற்றச்சாட்டுகள் கட்டாயம் முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் மனைவி சொந்தச் செலவில் முகவர் ஒருவர் ஊடாகச் ஹஜ் கடமையை நிறைவேற்றிய போதிலும் மறைமுகமாக குறித்த முகவர் மீது பாரபட்சம் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இத்தகைய குற்றச்சாட்டுக்களை தவிர்ப்பதற்காக ஹஜ் குழு தெளிவானதொரு கொள்கைத் தீர்மானத்தினை மேற்கொண்டது.
இதற்கமைய, ஹஜ் குழு உறுப்பினரின் மனைவி ஹஜ் செய்ய விரும்பினால், அவர்கள் எந்தவொரு ஹஜ் முகவருடனும் ஹஜ் செய்வதற்குப் பதிலாக பேசா விசாவைப் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை, ஹஜ் குழு உறுப்பினரான கணவர் – மனைவியின் போசா விசா செலவு, விமானக் கட்டணம், தங்குமிடம் மற்றும் உள்நாட்டுப் பயணச் செலவுகளைச் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக இந்த நோக்கத்திற்காக ஹஜ் நிதியிலிருந்து எந்தவொரு நிதியும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. இது தன்னிச்சையான முடிவொன்றல்ல.
இந்த கொள்கைத் தீர்மானம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் அனுமதியும் பெறப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
முன்னர் செயற்பட்ட ஹஜ் குழுக்களை போலல்லாமல், தற்போதைய ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் அவர்களுக்க சட்ட ரீதியாக ஒதுக்கப்பட்ட கூட்டத்திற்கு பங்கேற்பதற்கான பிரயாணக் கொடுப்பனவினைக் கூட பெறுவதில்லை.
தங்கள் பணிகளை முற்றிலும் தொண்டர் அடிப்படையிலேயே தற்போதைய ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதேவேளை, ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணக் கொடுப்பணவுகளும் தற்போது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், பல ஹஜ் குழு உறுப்பினர்கள் கடந்த வருடம் தங்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயணக் கொடுப்பணிவில் கணிசமான தொகையினை ஹஜ் நிதியத்திற்கு திருப்பிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹஜ் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதும் நேர்மையற்ற முகவர்களினால் ஹாஜிகளின் உரிமைகள் மற்றும் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை இல்லாமலாக்குவதுமே ஹஜ் குழுவின் முதன்மை நோக்கமாகக் காணப்பட்டது.
அதேநேரம் பல முகவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள ஹாஜிகளுக்கு நேர்மையான மற்றும் உண்மையான சேவையை வழங்குகின்றனர்.
இவ்வாறான நிலையில், முன்னர் நடைமுறையில் இருந்த கோட்டா ஒதுக்கீட்டு முறையை ஒழித்து, ஹாஜிகள் தங்களுக்கு விருப்பமான முகவரை தெரிவுசெய்யும் சுதந்திரத்தை இந்த வருட ஹஜ் குழு வழங்கியது.
முன்னர் கோட்டாக்கள் முகவர்களின் கைகளில் இருந்ததால், அவர்களைத் தேர்ந்தெடுக்க ஹாஜிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இந்த முறைக்கு பதிலாக இப்போது ஹாஜிகள் திறந்த சந்தையில் திறமையான மற்றும் செயல்திறன் மிக்க முகவர்களை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், ஹஜ் கோட்டாக்களை பெருந் தொகைக்கு விற்றுத் தொழில் செய்து வந்த முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த தீர்மானத்தினை சில ஹஜ் முகவர்கள் கடுமையாகவே எதிர்த்தனர். அவர்கள் தற்போது சமூக மற்றும் அச்சு ஊடகங்களைப் பயன்படுத்தி ஹஜ் குழுவிற்கு எதிராக அவதூறுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய அவதூறுப் பிரச்சாரங்கள் காரணமாக தங்களது பணியை ஒருபோதும் சீர்குலைக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதில் ஹஜ் குழு உறுதியாக உள்ளது.
ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் எங்கள பணியில் எப்போதும் வெளிப்படையான மற்றும் ஒளிவுமறைவற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறோம்.
அத்துடன் இது தொடர்பான எந்தவொரு தகவல் கோரிக்கைக்கும் பதிலளிக்க எப்போதும் ஹஜ் குழுவி தயாராகவே உள்ளது. தேவைப்படும் எந்தவொரு தெளிவுபடுத்தலையும் அல்லது கூடுதல் தகவலையும் வழங்க ஹஜ் குழு எப்போதும் தயாராகவே உள்ளது” என்றார்.



