இதுவரை 4 இலட்சத்து 36 ஆயிரத்து 270 சுவரொட்டிகளை நீக்கி உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட 04 இலட்சத்து 36 ஆயிரத்து 270 வரையான சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 904 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆயிரத்து 220 கட்அவுட்களும் நீக்கப்பட்டு ஆயிரத்து 218 பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பணிகளுக்காக பொலிஸ் திணைக்களத்துக்கு ஆயிரத்து 500 வரையிலான ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினால் நாடு முழுவதும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 1981ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமையவும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவும் செயலாற்ற வேண்டும். இருந்தபோதும் ஒரு சில இடங்களில் சட்டங்கள் மீறப்படுவதை நாங்கள் கண்காணித்துள்ளோம்.
இதுதொடர்பான பொலிஸ் கண்காணிப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
நேற்று (நேற்று முன்தினம்) 24ஆயிரத்து 114 சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கப்பட் டுள்ளதுடன், 07ஆயிரத்து 890 வரையிலான சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 29 பதாகைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், 14 பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 119 கட்அவுட்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக 110 கட்டவுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், 181 அறிவித்தல்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், 48 அறிவித்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கமைய, கடந்த மாதம் 17ஆம் திகதியிலிருந்து நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் மொத்தமாக 04 இலட்சத்து 36 ஆயிரத்து 270 வரையான சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 904 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆயிரத்து 218 பதாகைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், 870 பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயிரத்து 220 கட்அவுட்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 250 கட்அவுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 05ஆயிரத்து 605 வரையிலான அறிவித்தல்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், 09ஆயிரத்து 610 அறிவித்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாடுகளுக்காக 1,500 வரையிலான ஊழியர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து அவர்களே இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கு மேலதிகமாக சட்டவிதிமுறை மீறல்கள் தொடர்பில் மொத்தமாக 304 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் குற்றச்செயல்கள் தொடர்பில் 84 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஏனையவை தேர்தல் சட்டவிதிமுறை மீறல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளாகும். அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் கணினி குற்றத்தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களில் குறிப்பிட்ட ஒருவருக்கு மாத்திரம் உயிரச்சுறுத்தல் இருப்பதாக எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினூடாக அவர்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுத் தகவல் கிடைத்தால் அதுதொடர்பில் நாங்கள் விரைந்து செயலாற்றுவோம்’’ என்றார்.