பிரித்தானியாவில் அச்சத்தையும் பிளவையும் தூண்டும் நோக்கில், இலங்கையிலிருந்து இயக்கப்படும் பேஸ்புக் பக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது

பிரித்தானியாவில் அச்சத்தையும் பிளவையும் தூண்டும் நோக்கில், இலங்கையிலிருந்து இயக்கப்படுவதாகக் கூறப்படும் ஒரு முகநூல் (Facebook) பக்கம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை வெளியிடுவது குறித்து தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளையர் ஹியூஸ் (Claire Hughes) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹியூஸின் கூற்றுப்படி, ‘Heart of UK’ என்று அழைக்கப்படும் இந்தப் பக்கம் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டது அல்ல, இருப்பினும் இது இணையத்தில் இலட்சக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.
பொதுமக்களின் கருத்தை திசைதிருப்பவும், ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜிற்கு (Nigel Farage) ஆதரவைத் திரட்டவும், பிரித்தானிய வீதிகளில் மக்கள் இருப்பது போன்ற போலியான காணொளிகளை உருவாக்க இந்தப்பக்கம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
“இது ஒரு வேடிக்கையான விடயம் அல்ல. மக்கள் இதனை நம்பி ஏமாறுகிறார்கள்,” என்று ஹியூஸ் கூறினார். நாட்டைப் பிளவுபடுத்தவும் தேர்தல்களில் தலையிடவும் இலங்கையிலிருந்து ‘பாட்கள்’ (Bots) மூலம் இந்தப் பக்கம் இயக்கப்படுவதாக அவர் எச்சரித்தார்.
“இணையத்தில் நீங்கள் காண்பது அனைத்தையும் எப்போதும் நம்பிவிட முடியாது” என்று வலியுறுத்திய அவர், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.



