வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மிரட்டி தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ள சம்பவம் பதிவு #இலங்கை

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரது கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (14) தனது கணவருடன் கொஸ்கம, பொல்லதாவ பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வந்து, பெண் பொலிஸ் சார்ஜன்ட்-இன் கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, அவர் அணிந்திருந்த அரை பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பெண் பொலிஸ் சார்ஜன்ட் பொலிஸில் அளித்த புகாரின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.



