தேர்தல் காலத்தில் 12 லட்ச ரூபாய்க்கு Vitz கார் வழங்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், இன்று வாகனங்கள் மீது 50 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது ; சஜித் குற்றச்சாட்டு

கடந்த தேர்தல் காலத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக சிற்றூந்துகளை வழங்குவதாகப் வாக்குறுதி அளித்த தற்போதைய அரசாங்கம், இன்று வாகனங்கள் மீது 50 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி விதிப்பின் காரணமாக வாகனங்களின் விலை அதிகரிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் கூறும் கூற்று வேடிக்கையானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான கதைகளைக் கூறாமல் மக்களின் தரப்பிலிருந்து பொருளாதாரத்தை முறையான வழியில் நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த வரி விதிப்பின் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், அதன் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இதன் காரணமாக பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலைகள் உயர்ந்து ஒட்டுமொத்த மக்கள் வாழ்க்கையும் சீர்குலைந்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டுமாயின், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவை அத்தியாவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
“தற்போதைய ஜனாதிபதிக்கோ, நிதியமைச்சருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ பொருளாதாரக் கொள்கைகள் அல்லது பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு இல்லை. அவர்கள் நாளாந்தம் எடுக்கும் தவறான தீர்மானங்களால் மக்களுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான யுத்த மோதல்கள் தீவிரமடைந்த போதே, இந்த ஆசியப் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகியிருக்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான முன்தயாரிப்புகள் இல்லாததாலேயே ரூபாய் மதிப்பு இந்தளவுக்குச் சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, பொருட்களின் விலை உயர்வால் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் மக்களின் அத்தியாவசிய மானியங்களை வெட்டாமல், அவற்றை மேலும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

