மாலைத்தீவில் கடலுக்கு அடியில் உள்ள குகையை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் உயிரிழந்த சோகம்

மாலத்தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் குகையை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இத்தாலி நாட்டு நீச்சல் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
இத்தாலியின் புகழ்பெற்ற ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை மோனிகா மான்டெ பால்கோன், அவரது மகள் ஜியோர்ஜியா உள்பட 4 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு படகு பயிற்றுநர் என 5 பேர் கொண்ட குழுவினர் ‘வாவூ அட்டோல்’ என்ற ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளனர்.
சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள இருண்ட குகைக்குள் அவர்கள் நுழைந்து ஆய்வு செய்தபோது, கடலில் திடீரென இராட்சத நீர்ச்சுழல் ஏற்பட்டது. இதனால் குகைக்குள் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கிக்கொண்டனர். ஆழமான பகுதியில் நிலவிய கடும் ஆக்சிஜன் நச்சுத்தன்மை காரணமாக, 5 பேரும் மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை ஒரு சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் முயற்சிகளுக்கு மோசமான வானிலை தடையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் மீட்பு பணி துவங்கும் என குறிப்பிட்டுள்ளது


