“மனச்சாட்சிக்கு இணங்க நாங்கள் தப்பு செய்ய மாட்டோம்.. அதனால் நாங்கள் விடுதலையாவோம் என்று கூறுவதற்கு உரிமை உண்டு..” – வடகல

தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் மோசடி அல்லது ஊழல்களுடன் தொடர்புபடவில்லை எனவும், தாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து மனச்சாட்சிக்கு இணங்க பலத்த நம்பிக்கை உள்ளதாகவும், அதனால் நாங்கள் விடுதலையாவோம் என்று கூறுவதற்கு உரிமை உண்டு எனவும் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் என்ற ரீதியில் எவ்விதத்திலும் மோசடி மற்றும் ஊழல்களுக்கு இடமளிக்கவில்லை எனவும், இனிமேலும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் வலியுறுத்தினார்.
சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரை குழுவின் முன்னிலையில் அழைக்குமாறு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது குறித்து குழுவிற்குள் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் இங்கு வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், இதுவரையில் நான்கு அல்லது ஐந்து சாட்சியாளர்களிடம் பெறப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த போது, இவர்கள் இருவரும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதற்கான எந்தவொரு விடயமும் அவதானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, காரணமின்றி அவர்களை குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கான தேவை இல்லை என குழுவின் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் தொடர்பாக பிரச்சினை உருவானால், அவர்களை அழைப்பதற்கான உரிமை குழுவிற்கு உண்டு என தலைவர் தீர்மானித்துள்ளதாக வடகல மேலும் குறிப்பிட்டார்.
குழுவின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், அதன் தகவல்களை இரகசியமாக வைத்திருப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும், பொதுமக்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு தமக்கு இருப்பதாகக் கூறினார். குழுவிற்குள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாகஹானந்த கொடித்துவக்கு மற்றும் உதய கம்மன்பில போன்றவர்களிடம் அதிகப்படியான குறுக்குக் கேள்விகளை எழுப்பியது எதிர்க்கட்சி உறுப்பினர்களே என்றும் அவர் இங்கு வெளிப்படுத்தினார்.
தமக்கு கிடைத்த மக்கள் ஆணையை எழுத்துக்கு எழுத்து நிறைவேற்றுவதாக தெரிவித்த பிரதி அமைச்சர், கடந்த காலத்தில் இருந்த ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காமல் செயற்படும் என தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சட்டமூலங்களை கொண்டுவந்து, தாம் வெறும் வார்த்தைகளால் அல்லாமல், நடைமுறையில் மக்கள் ஆணையை எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதை காட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

