ஹஜ் “பேஸா” (Baza) விசா, குடும்ப சுற்றுலாவா? ஹாஜிகளுக்கான சேவையா?
இலங்கை முஸ்லிம் சமூகம் மத்தியில் ஹஜ் காலம் நெருங்கும் பொழுது வழக்கமாக சர்ச்சைகளையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தும் பேஸா விசா” (Baza Visa) முறைகேடுகள் பற்றிய உண்மைகளை நாம் உரக்கப் பேச வேண்டிய நேரம் இது!
பொதுமக்களிடையே நிலவும் தவறான புரிதல்களையும், நடக்கும் முறைகேடுகளையும் சமூகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எதிர்பார்ப்பதால் நான் இந்த விளக்கத்தை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
1.இது ஏழைகளுக்கான ‘இலவச ஹஜ்’ அல்ல!
பலர் நினைப்பது போல, இது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ சவூதி அரசு வழங்கும் இலவச விசா அல்ல. இது ஒரு “பணிப்பார்வை விசா” (Service/Mission Visa) என்பதனை சமூகம் முதலில் தெளிவு பெற வேண்டும்.
இந்த விசேட விசாவின் உண்மையான நோக்கம், புனித ஹஜ் கடமையின் போது அந்தந்த நாட்டு ஹாஜிகளின் உணவு, தங்குமிடம், மருத்துவம், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். அத்துடன், தேவையான தொழில்நுட்ப மற்றும் அலுவலக இணைப்புப் பணிகளை மேற்கொண்டு, அனைத்துச் சேவைகளும் தரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதே இதன் பணியாகும்.
இதற்காகவே, ஒவ்வொரு நாட்டினதும் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான உத்தியோகபூர்வ குழு அல்லது அமைச்சு, துறைசார் அடிப்படையில் தகுதியான தொண்டர்கள் (Volunteers), வைத்தியர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்புதாரிகளைத் தெரிவு செய்து, ஹாஜிகளுக்குச் சேவை செய்வதற்காகவே இவர்களைப் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், இந்த விசாவில் செல்பவர்கள் அங்கு வணக்க வழிபாடுகளை விட, ஹாஜிகளுக்காக உழைக்க வேண்டிய பணியாளர்கள் என்ற பொறுப்பையே சுமந்துள்ளனர்.
2.150 விசாக்கள் ஏன் 35 ஆகக் குறைக்கப்பட்டன?
சவூதி அரசு கோவிட்-19 சவாலைத் தொடர்ந்து ஹஜ் உடைய அனைத்து நடவடிக்கைகளையும் தொழில்நுட்ப அடிப்படையில் “e-Path & Nusuk” போன்ற சேவைகளுக்கு ஊடாக முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளதால், அதிகப்படியான அதிகாரிகள் நேரில் செல்ல வேண்டிய தேவை இப்போது இல்லை என்பதனாலேயே.
இதன் அடிப்படையில் 100 ஹாஜிகளுக்கு 1 அல்லது 1.5 என்ற வீதத்திலேயே சவூதி அரசு இந்த விசாக்களைக் கணக்கிடுகிட்டு அனைத்து நாடுகளுக்கும் தேவை அடிப்படையில் பகிர்ந்து அளிக்கின்றது.
இலங்கைக்கு கடந்த சில வருடங்களாக 3,500 ஹஜ் விசாக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுவதால், அதற்கேற்ப இந்த “பேஸா” விசாக்களின் எண்ணிக்கையும் 35 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
3.35 விசாக்களில் இம்முறையும் முறைகேடுகள் நடந்துள்ளதா?
உண்மையில் கிடைத்த இந்த 35 விசாக்களும் தகுதியான, ஹாஜிகளுக்குச் சேவை செய்யும் துறை சார் அடிப்படையிலான உண்மையான தொண்டர்களுக்கும் ஹஜ் முகவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?
ஹஜ் முகவர்களுக்கு (Travel Agents) 18 விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியவற்றில் எப்படியானவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் இதில் ஹஜ் குழுவின் இரு முக்கிய உறுப்பினர்கள் தங்களது மனைவிமார்களுக்கு இந்த “பணிப்பார்வை” விசாக்களைப் பகிர்ந்து கொடுத்துள்ளனர் என்பதனை அவர்களே ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளனர்.
ஒரு சாதாரண ஹாஜி சுமார் 20-25 இலட்சம் ரூபாய் ஹஜ் கட்டணமாக முகவர்களுக்கு செலுத்தும் போது, ஹஜ் குழு தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமக்கு நெருக்கமான குறிப்பிட்டவர்களுக்கு பேஸா வீசாவின் ஊடாக வெறும் 12 இலட்சம் ரூபாயில் ஹஜ்ஜை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள்.
இதைப் பற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்பும் பொழுது “பக்கச்சார்பு வந்துவிடக் கூடாது என்பதால் தான் சொந்தக்காரர்களை இந்த விசாவில் கூட்டிக்கொண்டு போகிறோம்” என்று ஹஜ் குழு கூறும் வாதம், மக்களை ஏமாற்றும் வெறும் சிறுபிள்ளைத்தனமான வாதமாகவே நான் பார்க்கின்றேன்.
ஹஜ் குழுவிடம் முன்வைக்கப்படும் எனது 3 முக்கிய கோரிக்கைகள் .
1.வெளிப்படைத்தன்மை (Transparency): இந்த 35 விசாக்களும் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன? அவர்களின் பெயர்கள், தகைமைகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் சவூதியில் எமது ஹாஜிகள் தேவைகளின் பொழுது அவர்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பகிரங்கமாக வெளியிட வேண்டும்!
2.ஆவணம் விநியோகித்தல்: இந்த விபரங்கள் அடங்கிய ஆவணம் முகவர்கள் ஊடாக ஒவ்வொரு ஹாஜிகளுக்கும் விநியோகிக்க வேண்டும்.
3.தகுதிகாண் முறைமை (Criteria): உறவினர்களுக்கும் அரசியல் சிபாரிசு அடிப்படையிலும் திணைக்களத்தின் seniority அடிப்படையிலான அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அளிப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, தகுதியான மருத்துவர்கள் மற்றும் அனுபவமுள்ள தொண்டர்களைத் தெரிவு செய்ய முறையான கொள்கைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்!
ஹஜ் போன்ற ஒரு புனிதமான விடயத்தில், “பேஸா” விசா என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் குடும்பச் சுற்றுலாவிற்கான (Family Tour) வாய்ப்போ, அரசியல் கணக்கு தீர்க்கும் சன்மானமோ அல்ல! இதில் முறைகேடாக எவராவது விசாக்களைப் பயன்படுத்தியிருந்தால், அவர்கள் மீது உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனை முஸ்லிம் கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முலவ்பர் ஆகியோரிடம் பணிவாக கேட்டுக் கொள்கின்றேன்.
உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்! வெளிப்படைத் தன்மையை கோருங்கள்!
வசீர் முக்தார்


