News

ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு கூட்டங்களுக்கு மக்கள் அலை அலையாக அணிதிரள்கின்றனர் – டக்ளஸ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு கூட்டங்களுக்கு மக்கள் அலை அலையாக அணிதிரள்வதை பார்க்கும்போது அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த வெற்றியில் எமது மக்களின் பங்கும் கணிசமாக இருப்பதாக அமைவது தமிழ் மக்களின் அபிலாசகளை வெற்றிகொள்வதற்கு வழிசமைத்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்வதற்கான முழங்காவில் மக்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



ரணில் விக்ரமசிங்கவின் ஆற்றல்களை நாட்டுக்கு பயன்படுத்தாமல் விடுவோமாயின் நாடும் மக்களும் மீண்டும் படுகுழியில் விழும் நிலை உருவதோடு எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பினூடாக நாட்டின் தலைவரை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.



அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறமுடியும் என நான் உறுதியாக கூறுகின்றேன்.



கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி நாம் எமது கொள்கைகளையோ எடுத்துக்கொண்ட பாதையையோ மாற்றியது கிடையாது.



கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துங்கள் அதனூடாக எமது மக்களுக்கான அனைத்தையும் படிப்படியாக வெற்றிகொள்ள முடியும் என்றே வலியுறுத்தி வருகின்றோம்.



கடந்த காலங்களில் எமது கருத்துக்கள் ஒரு சிலரது சுயநலன்களுக்காக திட்டமிட்டு சேறுபூசல்களுக்குள்ளாக்கப்பட்டது.



ஆனால் நாம் கூறிய பாதையும் வழிமுறையும் தான் சரியானது என்று இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால்தான் எமது வழிநோக்கி மக்கள் இன்று அலை அலையாக அணிதிரளத் ஆரம்பித்துள்ளனர்.



எமது கொள்கையை ஏற்று எமது வாக்குறுதிகளை நம்பி இன்று மக்கள் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற செய்ய அணிதிரண்டுள்ளமையானது எமது கொள்கையும் வழிநடத்தலும் தான் சரியானது என்பதை காட்டுகின்றது.



அந்தவகையில், கடந்த இரண்டு வருடத்திற்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால் தன்னுடைய செயல்பாட்டால் நாட்டுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றர். அந்த சூழ்நிலை சீர்குலையாது தொடர அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று விருப்புகின்றேன்.



அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செயற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.



அந்தவகையில், எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button