News

தங்கச் சிலையை திருட வந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பதிவு #புத்தளம்

புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின்  தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.



நேற்று (17) அதிகாலை வேன் ஒன்றில்  குறித்த விகாரைக்கு வருகை தந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு பாதுகாப்புக்கு இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் துப்பாக்கிகளையும் பறித்தெடுத்து, அங்கிருந்த தங்கச் சிலையை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.



கொள்ளையர்கள் தங்க சிலையை திருடுவதற்கு முற்பட்டபோது, அங்கிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சத்தமாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.



அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு விகாரையில் தங்கியிருந்த தேரர்களும் ஏனையவர்களுடன் கிராம மக்களும் இதன்போது அங்கு வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.



இவ்வாறு விகாரையில் மக்கள் ஒன்றுகூடுவதை அவதானித்த கொள்ளையர்கள் சிலர் , தாம் வருகை தந்த  வேனில் தப்பிச் சென்றதாகவும், அதில் மூவர் விகாரை வளவு வழியாக தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், அந்த மூவரில் ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



எனினும், விகாரை வளவு வழியாக தப்பிச் சென்ற ஏனைய இருவரும் பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.



எவ்வாறாயினும், இன்று காலை முதல் சாலியவெவ பொலிஸாருடன் இணைந்து , கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் தப்பிச் சென்ற கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.



இதன்போது தப்பிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேறு இடமொன்றுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்த போது கிராம மக்கள் வளைத்துப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



இந்த சம்பவம் தொடர்பில் சாலியாவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ரஸீன் ரஸ்மின்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker