அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபசார விடுதிகளும் சாராய தவறணைகளும் சட்டப்படி திறக்கப்படும் என ஹிஸ்புல்லாஹ் பொதுக்கூட்டத்தில் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபசார விடுதிகளும் சாராய தவறணைகளும் சட்டப்படி திறக்கப்படும். அவற்றை எதிர்த்து பள்ளிவாசல்களில் கூட உலமாக்கள் பேச முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேசத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (17) இரவு முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச். நாஸர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசித்து விட்டே நான் மீண்டும் மீண்டும் இதனைக் கூறி வருகின்றேன். அவ்வாறுதான் முஸ்லிம்கள் தமது பெருநாட்களைக் கூட அந்தந்த தினங்களில் தனித்துவமாகக் கொண்டாட முடியாது. அனைத்து மதத்தினருக்குமான பெருநாட்களை ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒன்றுகூடி குடித்து கும்மாளமடித்தே கொண்டாட முடியும்.
இவையெல்லாம் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லா இடங்களிலும் கூறி வருகின்றேன். ஆனால் எனது இக்குற்றச்சாட்டுகளுக்கு அநுர இன்னும் பதிலளிக்கவில்லை. மாறாக அவரது சாய்ந்தமருது பிரசாரக் கூட்டத்தில் எனது தலையை பரிசோதிக்க வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார். இவ்வாறு மழுப்பலாக சில கதைகளைச் சொல்கிறாரே தவிர எமது குற்றச்சாட்டுகளை மறுத்து சரியாக இன்னும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
(அஸ்லம் எஸ்.மெளலானா)