பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது – . தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஜனாதிபதியே பெற்றுக்கொடுக்க வேண்டும் ; தேர்தல்கள் ஆணையாளர்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அரசியலமைப்பின்படி, பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு திறைசேரியில் இருந்து ஜனாதிபதியினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
(நேற்று பகல் வேளையில் தெரிவிக்கப்பட்டவை) மேலதிக விபரம்👇 பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில், கலைக்கப்பட்ட தினத்திலிருந்து இரு மாதங்களில் பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆனால், 2024ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. அவ்வாறு தேர்தலை நடத்துவதென்றால் அதற்கு 11 பில்லியன் ரூபா தேவைப்படும். எனவே, பொதுத் தேர்தலின் நிதிச் செலவுக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்கவேண்டும்’’ என்று தேர்தல் ஆணை யாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் நேற்று (24) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘பாராளுமன்றத்தைக் கலைக்கும் தினத்திலிருந்து 52 66 நாட்களில் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிடும். அந்த வர்த்தமானி அறிவித்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் தினம், பொதுத் தேர்தலை நடத்தும் தினம் மற்றும் பாராளுமன்றம் மீண்டும் கூடும் தினம் என்பன குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த விடயங்கள் உள்ளடக்கிய வர்த்தமானி ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பத்துடன் வெளியானதுமே பொதுத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிட முடியும்.
தற்போது நடைமுறையிலுள்ள பாராளுமன்றம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே முழுமையாக இரத்துச் செய்யப்படும். அதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் தொடர்பில் எவ்வித நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒருவேளை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கமைய பாராளுமன்றத்தை கலைப்பதென்றால், பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவித்தலோடு அரசியலமைப்பின் 150(4) உறுப்புரையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை திறைசேரியிலிருந்து விடுவிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும்.
பொதுத் தேர்தலுக்கான நிதி சிக்கல்கள் எதுவும் ஏற்படுமாக இருந்தால் அதற்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஜனாதிபதியே பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா நிதி தேவைப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளோம்.
அதேபோன்று, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். ஆனால், இவர்களில் ஒரு கோடியே 35 இலட்சத்து 19 ஆயிரத்து 916 பேரே வாக்களித்திருக்கிறார்கள். அதாவது, நூற்றுக்கு 79.46 சதவீமானவர்கள் வாக்களிப்பு செய்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு 83.72 சதவீதமானவர்களும் 2015ஆம் ஆண்டு 82.51 சதவீதமானவர்களும் 2010ஆம் ஆண்டு 76.06 சதவீதமானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்