பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட ரீதியாக ஆசன ஒதுக்கீடு செய்யப்படுவது எப்படி?
எளிய கணிதம்.
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட ரீதியாக ஆசன ஒதுக்கீடு செய்யப்படுவது எப்படி?
தேசியப்பட்டியல் ஆசன ஒதுக்கீடு எப்படி நிகழ்கிறது? என்பது பற்றி நமது இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
அது புரிந்து கொள்ள ஒன்றும் இடியப்ப சிக்கல் இல்லை.
பாராளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 196 நேரடியாக மாவட்ட ரீதியாகவும் 29 தேசியப்பட்டியலூடாகவும் தெரிவு செய்யப்படும்.
அந்த 196 ஆசனங்களும் 22 மாவட்டங்களுக்கும் சனத்தொகை விகிதாசாரத்தின் படி தேர்தல் ஆணைக்குழுவினால் பகிர்ந்தளிக்கப்படும். குறிப்பாக சொல்லப்போனால் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் முன்னரை விட 01 உறுப்பினரும், யாழ் மாவட்டத்தில் 01 உறுப்பினரும் குறைக்கப்பட்டு, அவை கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
திகாமடுல்லை மாவட்டத்திற்கு வழமை போல 07 ஆசனங்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சிகள்/சுயேட்சை குழுக்கள் போனஸ் ஆசனமாக ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும். அது மற்றைய கட்சியை விட ஒரு வாக்கு அதிகமாக பெற்றாலும் கூட. அப்படி 22 மாட்டங்களிலும் 22 ஆசனங்கள் செல்லும்.
தவிர ஒவ்வொரு கட்சியும்/சுயேட்சை குழுவும் ஆசன ஒதுக்கீட்டு கணக்கிற்குள் உள்வாங்குவதற்கு குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 5% இற்கும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும். (இந்த 5% தான் அஷ்ரஃப் குறைத்த வெட்டுப்புள்ளி என்பது.)
சரி, ஆசன ஒதுக்கீட்டு கணக்கிற்கு வருவம். ஆசன ஒதுக்கீடு Largest Remainder Method மூலமாக கணிக்கப்படும்.
உதாரணமாக, திகாமடுல்லை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 1000 என்று எடுத்துக்கொள்வோம். அவை முறையே,
கட்சி A – 450
கட்சி B – 300
கட்சி C – 150
கட்சி D – 80
கட்சி E – 20 (மொத்த வாக்கின் 2%) என விழுந்துள்ளது என எடுப்போம்.
அதிகூடிய வாக்குகள் பெற்ற கட்சி A இற்கு நேரடியாக போனஸ் ஆசனம் சென்று விடும். கட்சி E இன் வாக்கு 5% இற்கு குறைவு என்பதால் நேரடியாக போட்டியிலிருந்து விலக்கப்படும். 5% இற்கு குறைவான அனைத்து செல்லுபடியான வாக்குகளும் கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்படாது.
இப்போது ஒரு ஆசனத்திற்கு தேவையான quota வை கணக்கிடுவோம். அதாவது, 980/6 = 163.33 (5%இற்கு குறைவான வாக்குகள் கழித்த பின்)
இப்போது ஒவ்வொரு கட்சி்பெற்ற வாக்குகளையும் quota இனால் பிரிக்க வேண்டும்.
கட்சி A – 450/163.33 = 2.75 – ஆசனம் 2, மீதி 0.75
கட்சி B – 300/163.33 = 1.83 – ஆசனம் 1, மீதி 0.83
கட்சி C – 150/163.33 = 0.91- ஆசனம் 0, மீதி 0.91
கட்சி D – 80/163.33 = 0.48 – ஆசனம் 0, மீதி 0.48
இப்போது முதல் சுற்றில் 3 ஆசனங்கள் ஒதுக்கியாயிற்று. இன்னும் 3 ஆசனங்கள் மீதமுள்ளன, அவை அதிகூடிய மீதி அடிப்படையில் பிரிக்கப்படும். அதாவது முறையே C,B,A கட்சிகளுக்கு ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும்.
அதன்படி, இறுதி தேர்தல் முடிவுகள் வருமாறு;
கட்சி A – 4 ஆசனங்கள் (3+ போனஸ் 1)
கட்சி B – 2 ஆசனங்கள்
கட்சி C – 1 ஆசனம்
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் முதல் சுற்றில் ஆசனம் கிடைக்காவிடினும், மீதமுள்ள வாக்குகள் அடிப்படையில் சிறு கட்சிகளுக்கும் இரண்டாம் சுற்றில் ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளன.
ஆசனங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அந்தந்த கட்சிகளின் ஆசனங்களுக்கு யார் யார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது அறிவிக்கப்படும்.
இப்போது நீங்கள் கடந்த பாரளுமன்ற தேர்தல் முடிவை எடுத்து எப்படி ஆசனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம். (கடந்த பாராளுமன்ற தேர்தலின் திகாமடுல்லை மாவட்ட முடிவு முதல் கொமன்டில் தரப்பட்டுள்ளது)
சரி, தேசியப்பட்டியல் கணக்கிற்கு வருவோம். அதற்கு கட்சிகள் தீவளாவிய ரீதியில் பெற்ற மொத்த வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும். இதுவும் கூட மேலே சொன்ன முறையில் கணக்கிடப்படும். ஆனால் முதல் quota பிரிப்பில், முதல் முழு எண்ணிற்கு அண்ணளவாக கணக்கிடப்பட்டு ஆசனங்கள் ஒதுக்கப்படும். முதல் சுற்றில் ஆசனம் பெற்ற கட்சிகள் இரண்டாம் தெரிவில் கவனத்தில் கொள்ளப்படாது.
உதாரணமாக, தீவளாவிய ரீதியில் மொத்தம் 100,000 செல்லுபடியான வாக்குகள் விழுந்துள்ளன என்று வைத்துக் கொள்வோம். அவை 29 ஆசனங்களுக்காக கட்சிகளுக்கிடையில் பிரித்து வழங்கப்பட வேண்டும்.
முதலில் quotaவை கணித்துக் கொள்வோம்.
100000/29 = 3448.28
அண்ணளவாக 3448 என்று எடுத்துக்கொள்வோம்.
கட்சிகள் பெற்ற வாக்குகளை quota இனால் பிரிப்போம்;
கட்சி A – 55,000/3448 = 15.95 அண்ணளவாக 16. எனவே 16 ஆசனங்கள்.
கட்சி B – 25,000 /3448 = 7.26 – அண்ணளவாக 7. எனவே 7 ஆசனங்கள்.
கட்சி C – 10,000 /3448 = 2.9 – அண்ணளவாக 3. எனவே 3 ஆசனங்கள்.
கட்சி D – 5,000 /3448 = 1.45 – அண்ணளவாக 1 . எனவே 1 ஆசனம்
கட்சி E – 3,000/3448 = 0.87 – ஆசனம் 0, மீதி 0.87
கட்சி F – 1,050/3448 = 0.3 – ஆசனம் 0, மீதி 0.3
கட்சி G – 950/3448 = 0.27 – ஆசனம் 0, மீதி 0.27
இப்போது முதல் சுற்றில் 27 ஆசனங்கள் ஒதுக்கியாயிற்று. இன்னும் 2 ஆசனங்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.
அதிகூடிய மீதம் அடிப்படையில் அவை இரண்டும் முறையே
கட்சிகள் E மற்றும் F இற்கு செல்லும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தேசியப்பட்டியலில் கூட, அதிகூடிய மீதம் அடிப்படையில் இரண்டாம் சுற்றிலேயே தெரிவு செய்யப்பட்டு, ஈற்றில் ஜனாதிபதி ஆனார் என்பது குறித்து சொல்ல வேண்டியது.
போலிக்கணக்குகளை சொல்லி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று யாரும் தலையில் மிளகாய் அரைக்க வருமுன் இளைஞர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
-சல்மான் லாபீர்.