பன்முக ஆளுமை கொண்ட கலாபூஷணம் பரீட் இக்பால்
பஸ்னா இக்பால்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்ற இவர் பல வருடங்களாக எழுத்துத்துறையில் தடம் பதித்து வருகிறார்.
இவர் எழுத்துத்துறைக்காக கலாபூஷணம் விருது பெற்றுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்களான பரீட்-றஸீனா தம்பதியினருக்கு 26-04-1959 இல் மூத்த மகனாக பிறந்தார். (எந்த இடத்தில் பிறந்தார் என்பது சுவாரஷ்யமானது ) இவர் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பிறந்தார். அதாவது இன்றைய ஒஸ்மானியா கல்லூரி அன்றைய இவரது பூர்வீக வீடு என்பது குறிப்பிடத்தக்க விடயம். ஒஸ்மானியா கல்லூரியின் இடது புறத்து சந்தியிலிருந்து ஜின்னா மைதானம் வரையுள்ள காணி இவரது தாயார் தம்பிக்கண்டு
றஸீனாவிற்கு சொந்தமானது. அங்குதான் இவர் பிறந்தார். மர்ஹூம் குத்தூஸ் அதிபர் அவர்களது காலத்தில் ஒஸ்மானியா கல்லூரி விஸ்தரிக்கப்பட்ட போது இவரது பூர்வீக வீடும் இணைத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் பத்திரிகைகளில் சர்வதேச தினங்கள், உலக நாட்டு தலைவர்களின் வரலாறுகள், விஞ்ஞானிகளின் வரலாறுகள், இஸ்லாமிய கட்டுரைகள், சிறுகதைகள், உலக புதினக் கட்டுரைகள், சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் போன்ற பல ஆக்கங்களை திறம்பட படைத்துள்ளார்.
இவரது ஆக்கங்கள் தினகரன் வாரமஞ்சரி, ஞாயிறு வீரகேசரி, விடிவெள்ளி, நவமணி, தமிழ்த்தந்தி, வலம்புரி, யாழ். தினக்குரல் போன்ற பல பத்திரிகைகளில் இன்றும் வெளிவருகின்றன. இவர் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைக்கு செய்தியாளராகவும் செயற்படுகிறார். மேலும் பட்டயக் கணக்காளர் எம்.எஸ்.எம்.ஜான்ஸின் அவர்கள் எழுதிய “மணிபல்லவத்தார் சுவடுகள்” எனும் வரலாற்று நூலுக்கு உதவியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் பல வரலாற்றுத் தொடர்களையும் எழுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஞாயிறு வீரகேசரியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். தமிழ்த்தந்தியில் நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ போன்றவர்களின் வரலாற்று தொடர்கள் இவரது சிறந்த படைப்பாகும். இன்றும் தினகரன் வாரமஞ்சரியில் இவர் நெல்சன் மண்டேலாவின் வரலாறை “கறுப்பு காந்தி நெல்சன் மண்டேலா” எனும் தலைப்பில் வரலாற்றுத் தொடரை எழுதி வருகிறார். 1990 இல் புலிகளால் யாழ் முஸ்லிம்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பதை தத்ரூபமாக கட்டுரையாக பல பத்திரிகைகளிலும் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பன்முக ஆளுமை கொண்ட இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், முஸ்லிம் சேவையில் “இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம்”, “கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் இனிய நினைவுகள்” எனும் தலைப்புகளில் ஆக்கங்களை தயாரித்து குரல் பதிவும் கொடுத்துள்ளார். இவர் அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் இருந்து சேவையாற்றி யாழ் முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்கின்றார்.
பன்முக ஆளுமை கொண்ட இவர் சமுதாயத்தில் இன. மத பேதமின்றி முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பது இவரது விஷேடமான சிறப்பம்சமாகும்.
யாழ்.பரீட் இக்பால் அவர்கள் விருதுகளாக கலாபூஷணம் விருது மட்டுமின்றி “யாழ்.முஸ்லிம் இலக்கிய ஜோதி”, “ரத்ன தீபம்”, “தேசோதய தீபம்”, “கலைமாமணி”, “தேசாபிமானி இலக்கிய செம்மல்” ஆகிய பல விருதுகளையும் பெற்று கெளரவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் யாழ்ப்பாணம் மஸ்ற உத்தீன் பாடசாலை, யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவராவார். படிக்கும் காலத்திலேயே பத்திரிகையில் ஆக்கங்களை எழுதி வருவது இவரது திறமையாகும். இவரது கன்னி ஆக்கம் தினகரனில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன் அவர்கள் அன்றைய பொறுப்பாளராக செயற்பட்ட “ஆலமுல் இஸ்லாம்” பகுதியில் “சுவர்க்கத்தின் திறவுகோல் தொழுகை” எனும் தலைப்பில் எழுதிய சிறிய ஆக்கமாகும். பாடசாலை காலத்திலேயே திறமையான மாணவராக திகழ்ந்து மாணவர் தலைவராகவும் க.பொ.த. உயர்தரம் கணிதப் பிரிவில் படிக்கும் காலத்தில் க.பொ.த. (உ/த) யூனியனில் தலைவராகவும் இருந்து பல சேவைகளை ஆற்றியுள்ளார். இவர் 1985 இல் யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த அபூஸாலி – தாஹிரா தம்பதியினரின் மூத்த புதல்வி நிஷாயா (நிமலா) என்பவரை மணமுடித்து பஸ்னா, இனாமுல் ஹஸன் எனும் இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவருக்கு 5 பேரப்பிள்ளைகளும் உண்டு.
யாழ் மண்ணில் பிறந்த இவர், இன்று பல ஊர்களிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் யாழ் முஸ்லிம் சமூக ஊடகம் எனும் வட்ஸப் குழுவை உருவாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன் பல வருடங்களாக பயணித்து சேவையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் யாழ் முஸ்லிம் சமூக ஊடகம் எனும் வட்ஸப் மூலம் தெரிவு செய்யப்படும் யாழ் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு வருடமும் “யாழ் முஸ்லிம் சமூக ஜோதி” எனும் விருது வழங்கி கெளரவிப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாக சபை உறுப்பினராக வாக்களிப்பின் மூலம் கலாபூஷணம் பரீட் இக்பால் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் யாழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவான முதலாவது நிர்வாகசபை அங்கத்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும். யாழ் பரீட் இக்பால் அவர்கள் ஊடகத்துறையிலும் கலைத்துறையிலும் மென்மேலும் வளர்ந்து பிறந்த யாழ் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம். 65 வயது கடந்த நிலையில் தற்போது பாணந்துறை சரிக்கமுல்லையில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் கலாபூஷணம் பரீட் இக்பால் எழுத்துத்துறைக்காகவும் சமூக சேவைக்காகவும் அல்லாஹ்வின் அருளால் நோயின்றி நீடூழி காலம் வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக.
*பஸ்னா இக்பால் – யாழ்ப்பாணம்*