புதிய அரசைப் பலப்படுத்த, ஹராமான உண்டியல் முறையை தவிர்ப்போம்!

உண்டியல் முறையில் பணம் அனுப்புவதை தவிர்த்தால் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும், விலைவாசிகள மற்றும் வாழ்க்கைச் செலாவணி குறையவும் பணவீக்கம் குறையவும் ஏதுவாகும்.
வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் போது நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பண்டங்களை, எரிபொருள் எரிவாயு, மருந்து வகைகள், மூலப் பொருட்களை, இயந்திரங்களை, வாகனங்களை போதிய அளவு இறக்குமதி செய்யலாம் அல்லது அவற்றின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்!
படிப்படியாக எமது தேசத்தின் வெளிநாட்டு கடன்களைச் மீளச் செலுத்தவும் அல்லது வருடாந்தம் செலுத்த வேண்டிய ஐந்து அல்லது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்களை படிப்படியாக திரட்டவும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கவும் முடியும்.
இலங்கை நாணயம் வலுவடையும் நிலையில் இறக்குமதி செலாவினங்கள் அவற்றின் விலைகள் குறைவது போல், இலங்கை அரசின் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்தும் பொழுதும் சதாகமான பலாபலன்கள் இருக்கின்றன.
இவ்வாறான சாதகமான பொருளாதார அடைவுகள் இலங்கையின் வருடாந்த அரையாண்டு, காலாண்டு அபிவிருத்தி சுட்டிகளில் பிரதிபலிக்கின்ற பொழுது இலங்கையின் நிதி நிலைமைகள் சீரடைவதனை, கடன்படு திறன் வலுவடைவதனை சர்வதேச வகைப்படுத்தும் நிறுவனங்கள் கவனத்திற் கொள்கின்றன.
வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கின்ற பொழுது உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கின்ற இயந்திராதிகள், மூலப் பொருட்கள், பசளை உர வகைகள், கிருமி நாசினிகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகள் தடையின்றி உள்வருவதனால் நாடு பல் துறைகளிலும் தன்னிறைவு காண்பதோடு ஏற்றுமதி வருமானத்தை படிப்படியாக அதிகரித்துக் கொள்ள முடியும், வர்த்தகப் பற்றாக் குறை குறைவடையும்.
உண்டியல் மூலம் நாம் பணத்தை அனுப்புவதனால் நாட்டில் சகலருக்கும் எமக்கும் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் சுபீட்சம் பல பெரு நிறுவன வர்த்தக மாஃபியா முதலைகளால் காவு கொள்ளப்படுவதனை பலரும் அறியாதிருக்கலாம், இது ஒரு வகையில் பொருளாதார சுரண்டலை, பகற் கொள்ளையை ஊக்குவிக்கும் முறை என்பதனையும் பலரும் அறியாதிருக்கலாம்!
உண்டியல் முறையோடு உடன்பிறந்த சகோதரர்களாக கருப்புப் பணம் சுத்திகரிக்கப்படல், நாட்டில் சுரண்டப்படும் கொள்ளையடிக்கப்படும் பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு முறைகேடான நிதிநிறுவனங்களில் சேமிக்கப்படுதல், மூதலீடூகள் செய்யப்படுதல் போன்ற சட்டவிரோதமான தேசத்துரோக நடவடிக்கைகளுக்கு வழிகோலுகின்றன.
அதேவேளை இவ்வாறான கறுப்புப்பண ஹவாலா பரிமாற்றங்கள் வெளிநாட்டு முதலீடுகள், மத்தியவங்கி பிணைமுறிகளை வாங்குதல் என சுழற்சி முறையில் சலுகைகளோடு உள்வரவும் வெளியே செல்லவும் பணச்சுத்திகரிப்பு செய்யப்படவும் ஏதுவாவதை பலரும் அறியாமல் இருக்கலாம்.
இவற்றிற்கு மேலதிகமாக பயங்கரவாத செயற்பாடுகள், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம், ஆட்கடத்தல், கடத்தல் வியாபாரம், என பாரிய குற்றச் செயல்களுக்கு உண்டியல் முறை பணப்பரிமாற்றங்கள் காரணமாக இருப்பதனை பலரும் அறியாதிருக்கலாம்.
நிதி குற்றவியல், நிதி புலனாய்வு போன்ற கடுமையான பொறிமுறைகள் இருந்த போதும் அரசியல் வர்த்தக அரச யந்திர பாதாள உலக மாஃபியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் வலு குறைந்து போகிறது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது ஒரு ஹராமான ஹவாலா பணப்பரிமாற்ற முறையாகும், தேசத்தின், தேச மக்களின் நலன்களுக்கு எதிராக வரியிறுப்பாளர்களின் வயிற்றில் அடிக்கும் பகற் கொள்ளை பணப்பறிமாற்ற முறையாகும், இத்தகைய நாணய வியாபாரம் இஸ்லாத்தால் ஹராமாக்கப் பட்டுள்ளதனை உலமாக்கள் தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்!
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் மாத்திரம் நாட்டின் சமூக பொருளாதார நிலைகள் ஒரே இரவில் சீரடைந்து விடுவதில்லை, இவ்வாறான தேசத்துரோக பகற் கொள்ளைகளை, குற்றவியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்ற பாரிய முறைமைகள் பொறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு சட்டத்தின் மேலாதிக்கம் உறுதி செய்யப்படல் வேண்டும்!
தொடரும்
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️29.09.2024

