News

பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன ; பிரதமர் கலாநிதி ஹரிணி

விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்தார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் 2024.09.27 காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பிரதமர் என்ற முறையில், எனது பொறுப்பில் உள்ள அனைத்து அமைச்சுக்களிலும் செய்யப்பட வேண்டிய மற்றும் இதுவரை செய்யப்படாத முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. குறிப்பாக விளையாட்டு அமைச்சில் பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன.

ஒரு அரசாங்கம் என்ற வகையில், பொது நிதியை விரயம் செய்தல், துஷ்பிரயோகம் செய்தல் குறித்து நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம், செலவினங்களைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே விழாக்களுக்கு செய்யும் வீண் விரயத்தை குறைக்க வேண்டும்.

அரசாங்கத்திடமிருந்து கிடைத்த ஒதுக்கீடுகள் மற்றும் செலவழிக்கப்பட்ட தொகைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அமைச்சிடம் உள்ளன. ஆனால் அந்த செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இதுவரை எந்த அவதானிப்பும் செய்யப்படவில்லை. செலவழித்த பணத்தில் என்ன நடந்தது என்பது பற்றி விரைவாக உள்ளக கணக்காய்வு ஒன்று செய்யப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து கண்டறிய நிறுவன ரீதியாக குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை. அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.

மற்றுமொரு முக்கிய விடயம் இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் கடமைகளின் போது நிகழும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டு அமைச்சிடம் முறையானதொரு திட்டம் இல்லை. எனவே, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்த சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நான் தெரிவித்துள்ளேன்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனைத்து பிரிவுகளின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button