News

ஓட்டமாவடி மஜ்மா நகர் பைத்துல் ஹைராத் பள்ளிவாசல் திறப்பு

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமையப் பெற்றுள்ள கொரோனா மையவாடியில் புதிதாக நிர்மாணம் பெற்ற “பைத்துல் ஹைரா” பள்ளிவாசலும் அதனுடன் கூடிய பல்தேவை கட்டட தொகுதியும் கடந்த நேற்றுமுன்தினம் (01) மாலை பி.ப 3.20 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த ஹாஜியானி மர்ஹுமா இரீபதுல் ஹைராவின் ஞாபகார்த்தமாக அவரது கணவர் ஏ.இஸட்.எம் ஸவாஹிர் ஹாஜியார் மற்றும் அவரது பிள்ளைகள், குடும்பத்தினரால் பல இலட்சம் ரூபாய் செலவில் இப்பள்ளியும் கட்டடமும் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அஸர் தொழுகையோடு பள்ளிவாசல் திறக்கப்பட்டதோடு சீனன்கோட்டை பள்ளிவாசல் மு அத்தின் ஸஹ்ரான் முர்ஸி அதான் நிகழ்த்தினார். பள்ளிவாசல் வக்ஃபு செய்யப்பட்டு அதற்குரிய சாவி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொருளாளர் கலாநிதி. அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி), முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் உட்பட மேற்படி திணைக்கள உயர் அதிகாரிகள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம் ஷிஹாப் ஹாஜியார் உட்பட பள்ளிச் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட உலமா சபை, வாழைச்சேனை ஓட்டமாவடி உலமா சபை முக்கியஸ்தர்கள், கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சீனன்கோட்டை , ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை உட்பட கிழக்கு மாகாணம் மற்றும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.

கொரோனா தொற்றினால் மரணித்து அங்கு அடக்கம் செய்யப்பட்டோருக்காக குர்ஆன், துவா பிரார்த்தனையும் இடம் பெற்றதோடு கலரா திக்கு மஜ்லிஸும் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

கொரோனா ஜனாஸாக்களை இரவு பகல் பாராது அடக்கம் செய்வதில் தியாகத்தோடு அர்ப்பணிப்புச் செய்த அனைவருக்கும் பணியாளர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் கையளிக்கப்பட்டன.

ஸவாஹிர் ஹாஜியாரின் குடும்பத்தினரால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எம். ஷிஹாப்தீன் அவர்களுக்கு விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனை சீனன்கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம் ஷிஹாப் ஹாஜியார், ஏ.இஸட்.எம் ஸவாஹிர் ஹாஜியார், அல்-ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர், அல்ஹாஜ் ரிகாஸ் ஸவாஹிர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொருளாளர் கலாநிதி அஸ்வர் அஸாஹிம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் ஆகியோர் இணைந்து கையளித்தனர்.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான உலமா சபையின் சார்பில் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி முஹம்மத் ஸாஜகான் (பலாஹி) மற்றும் மௌலவி முஹம்மத் மன்சூர் (பலாஹி) ஆகியோர் ஆகியோரினால் அல்ஹாஜ் ஏ.இஸட். எம் ஸவாஹிர், அல்ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர் ஆகியோரின் சேவைகளை கௌரவித்து பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கிழக்கிலங்கையின் மூத்த உலமாவும் காத்தான்குடி ஜாமியாத்துல் பலாஹ்வின் உப அதிபருமான மௌலவி முஹம்மத் அமீன் (பலாஹி) ஏறாவூர் பகுதிக்கான ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபா மௌலவி முஹம்மத் பதுர்தீன் (ஷர்கி) வாழைச்சேனை பகுதிக்கான ஷாதுலிய்யா கலீபா அப்துல் மஜீத் (ஷர்கி) காத்தான்குடி பகுதிக்கான மேற்படி கலீமா மௌலவி ஷாஜகான் (பலாஹி) வாழைச்சேனை பகுதி மூத்த உலமா மௌலவி எம்.எம் அன்வர் பாச்சா (ஷர்கி), அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உப தலைவர் மெளலவி எஸ்.எல் நெளபர் முன்னாள் உப தலைவர் முஹம்மத் கலீல் ஆலிம், கண்டி மாவட்ட உலமா சபை தலைவர் மௌலவி முஹம்மத் உமர்தீன் ஆலிம் உட்பட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(பேருவளை பீ.ம்.முக்தார்)

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker