முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்களின் மோசடிகளை அம்பலப்படுத்துவதில் அநுர அரசாங்கம் பின்வாங்குகிறதா? கட்சியின் செயற்குழு உறுப்பினர் வழங்கிய விளக்கத்தை இப்போதைக்கு ஏற்றுக்கொள்வோமா
முன்னாள் எம்.பி.க்களின் மோசடிகளை அம்பலப்படுத்துவதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரப்பு பின்வாங்குவாதாக தற்போது சலசலப்புகள் மேலோங்கியுள்ளது அறிந்ததே..
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பரப்புரை மேடைகளிலும் ஊடகங்கள் முன்பாகவும் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் நடைமுறையானது மந்த நிலை கொண்டுள்ளதான விமர்சனங்கள் எதிர் தரப்பில் இருந்தும், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் அண்மைக்காலங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இதற்கு ஏற்றல் போல் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுனாவின் அரசியல் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்சவும் குற்றங்களை அம்பலப்படுத்துமாறு அநுர தரப்புக்கு சவாலொன்றையும் விடுத்திருந்தார்.
இவ்வாறான விடயங்களை அடிப்படையாக கொண்டே அரசியல் ஆய்வாளர்களால் மேற்படி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர் தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் வெளிப்படுத்தும் இந்த சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால் கந்த முன்வைத்த சில கருத்துக்கள் மேலும் அரசியல் அரங்கங்களில் கேள்விகளை வெளிப்படுத்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த அக்கருத்தானது பின்வருமாறு அமைந்திருந்தது,
“முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட குழுவினரின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரி வருவதால் உரிய நேரம் கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும்.
முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் ஊழல் மோசடிகளை வெளிக்கொணரக் கோரும் குழுவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்த தடைகள் நீக்கப்பட்டு தற்போது அரச இயந்திரம் சுதந்திரமாக இயங்கி வருகிறது.
உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் இல்லாத இந்த நாட்டில் 03 மக்கள் பிரதிநிதிகள் செயற்படுவதாகவும், ஊழல் மோசடி விசாரணை தொடர்பான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படை வேலைத் திட்டத்தை ஏற்கனவே முன்னெடுத்துள்ளது
இப்போது பொது நிறுவன அமைப்பில் இருந்த தடைகளை நீக்கி விட்டோம். அந்தத் துறைகளிலும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை இயக்குநர் குழு மிகச் சரியாகச் செய்து வருகின்றனர். சவால்கள் இன்னும் சில நாட்களில் உரிய இடத்தைப் பெறுவார்கள். இலங்கையில் முதன்முறையாகப் பார்த்தால் மூன்று மக்கள் பிரதிநிதிகளே உள்ளனர்.
இது ஒருபோதும் நடந்ததில்லை. இப்போது மாநகர சபைகள், பிரதேச சபைகளின் பிரதிநிதிகள் இல்லை. மாகாண சபைகள் இல்லை. நாடாளுமன்றம் இல்லை.
மூன்று மக்கள் பிரதிநிதிகள் இந்த நாட்டை நடத்துகிறார்கள். அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 25 அமைச்சர்கள் மற்றும் 25 பிரதி அமைச்சர்கள் கொண்ட அரசாங்கம் அமைக்கப்படும் வரை இந்த நாட்டை தற்காலிகமாக நிர்வகிப்பதுதான் மூன்று பேரால் செய்ய முடியும்” என்றார்.
இந்த கருத்தானது அநுர தரப்பால் தேர்தல் மேடைகளில் வழங்கிய குற்றச்செயல்கள் தொடர்பான வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதப்படுத்தும் போக்கை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் அநுர அரசாங்கம் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்செயல்களுக்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்துகின்றதா என கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
அநுர அரசாங்கமானது இலங்கையின் ஆட்சிபீடம் ஏறி 10 நாட்களை கடந்துள்ளபோதிலும் அரசியல்வாதிகளின் குற்றச்செயல்கள் தொடர்பிலான வெளிப்பாடுகளை இதுவரை தாமதப்படுத்துவது ஏன் எனவும் அரசியல் அவதானிகளும், ஊடகங்களும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் அவதானங்களும் மேலோங்கியுள்ளன