News

தேர்தல் நடத்தப்படுவது உறுதி, அதில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாவார் ; வே. இராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி, அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் நேற்று (14) நடைபெற்ற சந்திப்பின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், பிரதி தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர். ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகீர் பாலசந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்குரிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிட்டுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. இந்நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா எனக்கோரி ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மற்றுமொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலுடன்தான் 19 நிறைவேற்றப்பட்டது. எனவே, இதுவிடயத்தில் சிக்கல் வராது.

எனவே, ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதி. ஜனாதிபதி தேர்தலுக்கென பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நிதி இல்லை என காரணம் கூறவும் முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் ஆக்கி தனி ஒருவராக நாடாளுமன்றம் வந்து, ஜனாதிபதியாக தெரிவானமை ஜனாதிபதி ரணிலின் திறமை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என குழம்பியுள்ளார். ஏனெனில் மக்கள் ஆணை அவருக்கு இல்லை.

அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சி தலைவராக சஜித் பதவிவகிக்கின்றார். அவருக்கான வெற்றி வாய்ப்பே அதிகம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் சஜித் பக்கம் இருந்து சிலர், ஜனாதிபதியுடன் இணையவுள்ளனர் எனக் கூறப்படுவதெல்லாம் சாத்தியமற்ற விடயமாகும் என தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button