நாம் சத்திய வழி நின்று நீதியை நிலைநிறுத்துவோம் ; ஜனாதிபதி
நேற்று ஞாயிற்றுக் கிழமை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது கார்டினல் மல்கொம் ரன்ஞித் அவர்களது அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர அங்கு விஜயம் செய்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுடனான கலந்துரையாடலின் பொழுது : “மிகவும் நெருங்கிய உறவுகளை எந்த வித நியாயமான காரணங்களும் இன்றி இழக்கின்ற வலி வேதனைகளை கடந்து வந்தவர்கள் நாம், உங்கள் மனக்குறைகளை எம்மால் நன்றாகவே உணர முடியும், பலியான உயிர்களை எம்மால் ஒருபோதும் மீட்டுத் தரமுடியாது என்ற போதும் நாம் சத்திய வழி நின்று உண்மைகளை கண்டறிந்து தொடர்புபட்ட சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்தி உங்களுக்கு நீதி பெற்றுத் தருவோம்” என்று கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் : “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றால் அதனை எந்தத் தரப்புக்கள் திட்டமிட்டு அரங்கேற்றினர், யார் எவரெல்லாம் தொடர்புபட்டனர், பயனடைந்தனர் என சகல விடயங்களையும் அவற்றின் ஆழ அகலங்களையும் கண்டறிவதற்கான தூய்மையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு நாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றும் கூறினார்.
ஜனாதிபதி அநுர பிரயோகித்த வார்த்தைகள் வெறுமனே சந்தர்ப்ப சூழ்நிலையில் வெளியிடப்பட்ட சோடிக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடாக அன்றி உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உணர்வுபூர்வமாக வெளிவரும் வார்த்தைகளாக இருந்ததை உணர்ந்தேன்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வெறுமனே கிறித்தவ மக்களுடன் மட்டுப்பட்ட விவகாரமல்ல, அது ஒரு தேசிய விவகாரமாகும், ஒட்டு மொத்த தேசத்தின் பாதுகாப்புத் துறையை, அரசியல் தலைமைகளை, ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புகளை, பிழையாக வழிநடாத்திய மிகப்பயங்கரமான சூழ்ச்சிகள் நிறைந்த சதித்திட்டமாகும்.
அதிலும் குறிப்பாக, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பலிக்கடாவாக்கி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் மீது காடைத்தனங்களை வன்முறைகளை கட்டவிழ்த்து எமது இருப்பை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய பாரிய சதி முயற்சியாகும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளை காயடித்து கைகட்டி வாய்மூடி நிற்கச் செய்து சகல இஸ்லாமிய அமைப்புக்கள், மத்ரஸாக்கள், ஜாமிஆக்கள், உலமா சபை, ஷூரா சபை என சிவில் சன்மார்கத் தலைமைகளையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவு என குற்றவாளிக் கூண்டுகளில் முன் நிறுத்திய பாதாள உலக சதி முயற்சியாகும்.
தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளராக நானும் மேற்படி பிரிவுகளில் விசாரணைகளுக்கு முகம் கொடுத்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அரச புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை ஏற்படுத்திய சதிமுயற்சியாகும்.
ஆட்சி மாறலாம், ஆட்சியாளர்கள் மாறலாம், ஆனால் இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள பாதாள உலக இனமதவெறி வங்குரோத்து அரசியல் கலாசாரம் மாற வேண்டும், சட்டத்தின் மேலாதிக்கம் உறுதிப் படுத்தப்பட்ட வேண்டும், உண்மைகளை கண்டறியும் பொறிமுறைகள் பலப்படுத்தப் பட வேண்டும்!
இந்த நாட்டில் அமைதி சமாதானம் சகவாழ்வு நிலைபெற வேண்டும், ஊழல் மோசடிகள் சுரண்டல்கள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், அராஜகங்கள் ஒழிய வேண்டும், அரசியல் ஸ்திரத் தன்மை நிலவ வேண்டும், பொருளாதார சுபீட்சம் ஏற்பட வேண்டும் அவை அனைத்தும் நீங்கள் சபதமிடும் சத்திய வழியில் நின்று போராடினால் மாத்திரமே சாத்தியப்பட முடியும்!
நாட்டை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ள பாரம்பரிய வங்குரோத்து சூதாட்ட இசைக் கதிரை அரசியலில் தேசமக்கள் நம்பிக்கை இழந்ததால் தான் தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியைத் தந்திருக்கிறார்கள், பலிக்கடா ஆக்கப்பட்ட சமூகங்களும் உங்களுக்கு அமோக ஆதரவைத் தந்திருக்கிறார்கள்.
ஜனாதிபதி அவர்களே!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் கிறித்தவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பதைப் போலவே அது இந்நாட்டு முஸ்லிம்கள் மீதும் எமது இருப்பு பாதுகாப்பு, சமய கலாசார விழுமியங்கள் மரபுரிமைகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுமாகும்!
சத்திய வழி நின்று உண்மைகளை கண்டறியவும் நீதியை நிலை நிறுத்தவும் உங்கள் கரங்களை எல்லோருக்கும் பொதுவான ஏக இறைவன் பலப்படுத்துவானாக!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
முன்னாள் பொதுச் செயலாளர்- தேசிய ஷூரா சபை.
✍️ 07.10.2024 || SHARE