ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் திடீரென உயிரிழப்பு #இலங்கை
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளன. இதனால் அங்குள்ள பண்ணையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
பன்றிகள் அடையாளம் காணப்படாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டே நாட்களில் உயிரிழந்துள்ளன. வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்றைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் 20 பண்ணைகள் உள்ளன. அவை அனைத்திலும் வைஸ் தொற்று பரவியுள்ளது. ஒரு பண்ணையில் 800 பன்றிகளில் 200க்கும் மேற்பட்டவை உயிரிழந்துள்ளன. மற்றைய பண்ணைகளில் 60 பன்றிகள் உயிரிழந்துள்ளன. மேலும், ஒவ்வொரு பண்ணையிலும் நூற்றுக்கணக்கான பன்றிக்குட்டிகள் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, வைரஸ் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் கால்நடை அலுவலகங்களில் இல்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட பன்றிகளை பார்வையிட்டு இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகாத பன்றிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் என நுவரகம்பலாத்த மத்திய கால்நடை வைத்திய நிபுணர் வைத்தியர் பிரசாத் மடத்துவ தெரிவித்துள்ளார்