News

யாழ்ப்பாணம்  நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் – வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச

2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற வழக்கு  விசாரணையின் போது அவரது சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஊடாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டா, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிக்க முதலில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களால் அங்கு ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில், இலங்கையில் உள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார் என ராஜபக்சவின் சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய முன்னைய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தொடர்பான கரிசனைகள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக இருக்கும் போது கோட்டாபய ராஜபக்சேவை சாட்சியாக அழைக்க முடியாது என்று முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த வாதங்களை விசாரித்தது.

ராஜபக்சே ஜனாதிபதியாக பதவி வகிக்காததால், சாட்சியம் அளிக்கும்படி கட்டாயப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கை மேலும் பரிசீலிப்பதற்காக, அடுத்த விசாரணையை மார்ச் 18, 2025க்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக யாழ்ப்பாணத்தில் காணாமல் போன குறித்த செயற்பாட்டாளர்களின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவையடுத்து யாழ் மஜிஸ்ரேட் நீதிமன்றம் 2019 இல் கோட்டாவுக்கு அழைப்பாணை விடுத்தது.

அந்த நேரத்தில், அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியவில்லையென தெரிவித்ததுடன் அழைப்பாணையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவரது ஜனாதிபதி பதவிக்காலம் தற்போது முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் கோட்டாவை சாட்சியமளிக்க அழைக்கலாமா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும்.

முன்னாள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளுக்கு இவ்வழக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button