2021 இல் ஈரானிடம் பெற்ற எரிபொருள் கடனில் 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேயிலையை கொடுத்து கழித்த இலங்கை
இலங்கை ஈரானுக்கான 250.9 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடனில் 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேயிலை ஏற்றுமதி மூலம் தீர்த்து வைத்துள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தேயிலை ஏற்றுமதியின் ஊடாக இலங்கை தனது எரிபொருள் கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்ததாக அவர் கூறினார்.
இந்த கடனில் இன்று வரை 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், இலங்கை 4.1 மில்லியன் கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.
2021 டிசம்பரில், இலங்கையிடமிருந்து சுமார் 251 மில்லியன் டாலர் எண்ணெய் கடனுக்கு ஈடாக சிலோன் தேயிலையை ஏற்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
ஈரானின் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் தலைவர் அலிரேசா பெய்மன்-பாக் கூறுகையில், “சமீபத்திய பேச்சுவார்த்தையில், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மாதாந்திர ஏற்றுமதி வடிவில் ஈரானின் கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை நாங்கள் எட்டினோம்.”
அந்த நேரத்தில், Peyman-Pak மேலும் கூறுகையில், “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஈரானிய எண்ணெய்க்கான $251 மில்லியன் கடனைத் தீர்ப்பதற்காக, இலங்கை ஒவ்வொரு மாதமும் ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும்” ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது என்றார்.